YouTube தளத்திற்கு ஏற்பட்டுள்ள சிக்கல் – வீடியோவை நீக்க முடியாமல் திணறும் நிர்வாகம்
தற்போது உலகிலேயே மிகப்பெரிய வீடியோ ஸ்ட்ரீமிங் தளம் எதுவென்றால் அது யூடியூப்தான். இது உலகிலேயே மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான கூகுளுக்கு சொந்தமானது. இதுவரை யூட்யூபில் மிகப்பெரிய பிரச்சனை ஏற்பட்டதாக எவ்வித செய்திகளும் வெளிவந்தது இல்லை. ஆனால் முதல்முறையாக இந்த தளத்தில் ஆபாச காணொளிகள் பதிவேற்றப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தவறான காணொளிகள் பதிவேற்றம் செய்யப்பட்டால் அதை யூடியூப் தரப்பிலிருந்து உடனடியாக நீக்கிவிடுவார்கள். ஆனால் இந்த ஆபாச காணொளிகள் பதிவேற்றம் செய்த கணக்குகளை நீக்கிய பிறகும் அந்த வீடியோக்களை யூடியூப் தளத்திலிருந்து நீக்க முடியவில்லை. இதுகுறித்து வெளிவந்த 404 மீடியா அறிக்கையில், யூடியூப் தளத்தின் விதிமுறைகளை மீறி ஹேக்கர்கள் இத்தகைய காணொளிகளை அப்லோடு செய்துவிட்டதாகக் கூறப்பட்டுள்ளது. இது தவிர சில சமயங்களில் தவறான இணையதளங்களில் இருந்து காணொளியை நேரடியாக எடுத்து யூடியூபில் பதிவேற்றுவதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆபாச இணைப்புகள் பகிரப்படும் Discord சேனலில் ஒரு பயனர் 4 மில்லியனுக்கும் அதிகமான வரிகளில் எழுதப்பட்ட கோப்பை பகிர்ந்ததன் மூலமாக, யூடியூபில் நீக்க முடியாத வீடியோக்களை பதிவேற்ற முடியும் எனக் கூறப்படுகிறது. இந்த பிரச்சனையை யூடியூப் அல்காரிதம் சரி செய்து விட்டாலும், ஏற்கனவே பதிவேற்றிய வீடியோக்களை அதனால் நீக்க முடியவில்லை. இப்படி தவறாக பதிவேற்றப்பட்ட பல பதிவுகள் நீக்கப்பட்டாலும், இந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பதிவேற்றப்பட்ட எல்லா காணொளிகளையும் கண்டுபிடித்து நீக்குவதற்கான முயற்சியை யூடியூப் தொடர்ந்து செய்து வருகிறது.
யூடியூபில் ஏற்பட்டுள்ள இந்த பிரச்சனை பெரும் பிரச்சனையாகப் பார்க்கப்படுகிறது. ஏனென்றால் யூட்யூபில் அப்லோட் செய்யப்பட்ட ஒரு தவறான காணொளியை யூடியூப் நிர்வாகத்தாலே நீக்க முடியவில்லை என்பது, அந்த தளத்தில் உள்ள பிரைவசி பிரச்சனைகளைக் காட்டுகிறது. மேலும் இதனால் அந்த தளத்தின் மீதான பயனர்களின் நம்பிக்கைக்கு பங்கம் ஏற்படலாம் என்றும் சொல்லப்படுகிறது. இதை யூடியூப் நிர்வாகமும் ஒப்புக்கொண்டுள்ளது.