ஆஸ்திரேலியாவில் பாலஸ்தீன ஆதரவு பேரணி : போர்நிறுத்தம் குறித்து சந்தேகம்
ஆஸ்திரேலியாவின் சிட்னியில் ஆயிரக்கணக்கானோர் பாலஸ்தீனர்களுக்கு ஆதரவாகப் பேரணி நடத்தியுள்ளனர்.
சிட்னி ஓப்ரா ஹவுசில் ஊர்வலம் நடத்த நீதிமன்றம் இந்த வாரம் தடை விதித்ததைத் தொடர்ந்து இப் பேரணி இடம்பெற்றுள்ளது.
ஆஸ்திரேலியா முழுதும் மெல்பர்ன், சிட்னி உட்பட பல்வேறு நகரங்களில் இன்று (12) மட்டும் 25க்கும் மேற்பட்ட ஊர்வலங்கள் நடைபெற்றுள்ளன.
சிட்னிப் பேரணியில் 30,000 பேர் கலந்துகொண்டதாக அதற்கு ஏற்பாடு செய்த பாலஸ்தீன நடவடிக்கைக் குழு தெரிவித்தது.
அமெரிக்கா முன்னெடுத்துள்ள காஸா அமைதித் திட்டத்தின் முதற்கட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி காஸா வட்டாரத்திலிருந்து இஸ்ரேல், அதன் படைகளை மீட்டுக்கொள்ளத் தொடங்கியிருக்கிறது.
காஸா போர் ஆரம்பித்து ஈராண்டுக்கும் மேல் ஆகிவிட்டது. அதனை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கத்துடன் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் 20 அம்ச அமைதித் திட்டத்தை முன்வைத்தார். அதனை இஸ்ரேலும் ஹமாசும் ஏற்றுக்கொண்டன.
சண்டை நிறுத்தம் அறிவிக்கப்பட்ட நிலையிலும் இஸ்ரேல், காஸாவிலும் மேற்குக் கரையிலும் ராணுவ ஆக்கிரமிப்பைத் தொடர்வதாகச் சிட்னிப் பேரணியின் ஏற்பாட்டாளர் ஒருவர் கூறினார்.
இப் பேரணியில் எவரும் கைதுசெய்யப்படவில்லை என்று காவல்துறை தெரிவித்தது.





