புருனே நாட்டுக்கு வரலாற்று சிறப்பு மிக்க பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி
பிரதமர் மோடி அரசுமுறைப் பயணமாக இன்று புருனே நாட்டுக்கு சென்றார்.
அங்கு புருனே பிரதமர் அலுவலகத்தின் பட்டத்து இளவரசர் ஹாஜி அல்-முஹ்தாதீ பில்லா உற்சாகமாக வரவேற்றார்.
இந்த சந்திப்பின் போது இருநாட்டின் கொள்கை விவகாரங்கள் குறித்து இளவரசருடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார்.
பின்னர் புருனேயில் இந்திய தூதரகத்தின் புதிய அலுவலக வளாகத்தை மோடி திறந்து வைத்தார். திறப்பு விழாவில் கலந்து கொண்ட இந்திய சமூகத்தினருடன் மோடி கலந்துரையாடினார்.
அப்போது இரு நாடுகளுக்கும் இடையே வாழும் பாலமாக திகழ்வதுடன், இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தும் அவர்களின் பங்களிப்பை அவர் பாராட்டினார்.
புருனேவில் தற்போது, சுமார் 14,000 இந்தியர்கள் வசித்து வருகின்றனர். அங்கு சுகாதாரம் மற்றும் கல்வித் துறைகளின் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டில் இந்திய மருத்துவர்கள் மற்றும் ஆசிரியர்களின் பங்களிப்பு என்பது மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது..
இந்தியாவும், புருனேயும் இருதரப்பு கொள்கை விவகாரங்களில் வலுவான நட்புறவைக் கொண்டுள்ளன. இரு நாடுகளும் வரலாறு, கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தால் ஆயிரம் ஆண்டுகள் தொடர்பைக் கொண்டுள்ளன.
புருனேவுக்கு இந்தியப் பிரதமர் ஒருவர் மேற்கொள்ளும் முதல் இருதரப்பு பயணம் இதுவாகும். இந்தியா புருனே இடையேயான தூதரக உறவுகள் 40 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு, பிரதமரின் இந்த பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.