அமெரிக்க அழுத்தத்துக்கு பிரதமர் மோடி அடிபணிந்து விட்டார்
இந்தியா – அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் விவகாரத்தில், அமெரிக்காவின் அழுத்தத்துக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி
அடிபணிந்துவிட்டார் என மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சுமத்தியுள்ளார்.
நாடாளுமன்ற வளாகத்தில் ஊடகங்களுக்கு இன்று கருத்து தெரிவித்த போதே அவர் இதனை கூறியுள்ளார்.
இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர்,
‘‘பிரதமர் மோடி கலக்கம் அடைந்துள்ளார். கடந்த சில மாதங்களாக முடங்கி இருந்த இந்திய – அமெரிக்க வர்த்தக ஒப்பந்தத்தில் மோடி நேற்றிரவு கையெழுத்து இட்டுவிட்டார். அவர் மீது கடும் அழுத்தம் உள்ளது.
இதில் முக்கியமான விடயம் என்னவென்றால், பிரதமர் மோடி சமரசம் செய்து கொண்டார். பொதுமக்கள் இது குறித்து சிந்திக்க வேண்டும்.
இந்த வர்த்தக ஒப்பந்தத்தில் சமரசம் செய்து கொண்டதன் மூலம் பிரதமர் மோடி, மக்களின் கடின உழைப்பை விற்றுவிட்டார். நாட்டை அவர் விற்றுவிட்டார். நரேந்திர மோடி அச்சமடைந்துள்ளார். ஏனெனில், அவரது பிம்பத்தை வடிவமைத்தவர்களே இப்போது அதை உடைக்கிறார்கள்’’
என்றார்.
பிரதமர் மோடி சமரசம் செய்து கொண்டார் என எந்த அடிப்படையில் கூறுகிறீர்கள் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த ராகுல் காந்தி,
‘‘அமெரிக்காவில் அதானி மீது ஒரு வழக்கு உள்ளது. உண்மையில் அது மோடி மீதான வழக்கு. எப்ஸ்டீன் கோப்புகளில் இன்னும் வெளியிடப்படாத கோப்புகள் உள்ளன. இவை இரண்டும் அழுத்தத்துக்கான காரணிகள். இதை நாடு புரிந்து கொள்ள வேண்டும்’’ என்றார்.




