மோடியின் பதவிப் பிரமாணத்திற்காக ஜனாதிபதி ரணில் இந்தியா பயணம்
இந்தியாவின் பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்கும் நிகழ்வில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாளை (09) இந்தியா செல்லவுள்ளார்.
நரேந்திர மோடியின் அழைப்பின்படி, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.
இந்தியாவில் சமீபத்தில் நடந்த தேர்தல்களில் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க. பாரிய வெற்றியை பதிவு செய்திருந்தது.
அந்த வெற்றிக்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தொலைபேசியில் மோடிக்கு வாழ்த்து தெரிவித்தார்.
இதக்போது, தனது பதவிப் பிரமாண நிகழ்வில் பங்கேற்குமாறு ஜனாதிபதிக்கு இந்தியப் பிரதமர் அழைப்பு விடுத்துள்ளதாகவும், அந்த அழைப்பை அவர் ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்தியாவின் பிரதமராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நரேந்திர மோடியின் பதவியேற்பு விழா நாளை (09) ராஷ்டிரபதி பவனில் நடைபெற உள்ளது.
இந்தியாவின் பிரதமராக 73 வயதான நரேந்திர மோடி நாளை மூன்றாவது முறையாக பதவியேற்கிறார்.
இந்த நிகழ்வை முன்னிட்டு தலைநகரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.