வலுசக்தி பயன்பாடு குறித்து ஜனாதிபதி பிறப்பித்துள்ள உத்தரவு!
“நாட்டின் நாளாந்த வலுசக்தி நுகர்வு அதிகமுள்ள மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரையிலான காலப்பகுதியில், வலுசக்தியை மிகச்சிறந்த முகாமைத்துவத்துடன் பயன்படுத்துவது குறித்து மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும்.
அவர்களின் பங்களிப்புடன் நாட்டின் வலுசக்தி பாதுகாப்பை உறுதிப்படுத்தத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கவும்.”
இவ்வாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
வலுசக்தி பாதுகாப்பைப் பேணுவதற்காக தொடர்ச்சியாக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆராயும் பொருட்டு இன்று (23) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டம் நடைபெற்றது.
இதில் கலந்துகொண்டபோதே ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.
கடந்த சில வாரங்களாக வலுசக்தி முகாமைத்துவம் தொடர்பாக அரசாங்கத்தினால் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை மேலும் நடைமுறைச் சாத்தியமான நிலைக்குக் கொண்டு வருவது குறித்தும், குறிப்பாக அரச சேவைக்கு வழங்கப்பட வேண்டிய வழிகாட்டல்கள் குறித்தும் இதன்போது அவதானம் செலுத்தப்பட்டது.
அதேபோல், உள்ளூராட்சி மன்ற மட்டத்தில் வலுசக்தி நுகர்வை முறையான முகாமைத்துவத்திற்கு உட்படுத்துவதற்கு எடுக்கக்கூடிய நடவடிக்கைகள் குறித்து அந்தந்த நிறுவனங்களுடன் கலந்துரையாடுமாறும் ஜனாதிபதி அறிவுறுத்தினார்.
விளம்பரங்களுக்காகப் பயன்படுத்தப்படும் மின்சாரப் பெயர்ப்பலகைகள் மற்றும் ஏனைய அலங்கார மின் கட்டமைப்புகளுக்கு அதிகளவிலான மின்சாரம் செலவிடப்படுவதாகவும், அதனைக் மட்டுப்படுத்துவதன் மூலம் நாட்டின் மின்சார நுகர்வில் குறிப்பிடத்தக்க அளவைச் சேமிக்க முடியும் என்றும் இதன்போது குறிப்பிடப்பட்டது.
நகர்ப்புறங்களில் அவசியமற்ற வீதி விளக்குகளின் பயன்பாட்டைக் குறைத்தல் மற்றும் வலுசக்தி முகாமைத்துவத்திற்காக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சினால் முன்வைக்கப்பட்ட யோசனைகள் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.
அது தொடர்பாகப் பின்பற்றக்கூடிய மாற்று வழிமுறைகள் குறித்து சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினரும் இணைந்து கலந்துரையாடி, விரைவான நடவடிக்கைகளை எடுக்க வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி மேலும் சுட்டிக்காட்டினார்.





