அடுத்த கட்ட போருக்கு தயார் – இஸ்ரேல் இராணுவத்தின் பரபரப்பு அறிவிப்பு
அடுத்த கட்ட போருக்கு தயாராகிறோம் என்று இஸ்ரேல் ராணுவம் அறிவித்துள்ளது.
பாலஸ்தீனத்தின் காசா பகுதி ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக இந்த போர் அறிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேல் ராணுவம், ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு இடையே நேற்று 18-வது நாளாக போர் நீடித்தது. பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் சுமார் 400 இடங்களை குறிவைத்து இஸ்ரேல் போர் விமானங்கள் நேற்று தாக்குதல் நடத்தின. இதில் ஒரே நாளில் 700-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பதாக பாலஸ்தீன சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. காசா பகுதியில் ஒட்டுமொத்த உயிரிழப்பு 5,000-ஐ தாண்டியுள்ளது.
இதனிடையே ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு ஆதரவாக லெபனானை சேர்ந்த ஹிஸ்புல்லா தீவிரவாதிகள் இஸ்ரேலின் வடக்கு பகுதி எல்லையை குறிவைத்து தொடர்ந்து ஏவுகணை தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். அந்த எல்லைப் பகுதிகளிலும் சண்டை தீவிரமடைந்துள்ளது.
இந்த சூழலில் இஸ்ரேல் ராணுவ செய்தித் தொடர்பாளர் டேனியல் நேற்று கூறியதாவது:
பாலஸ்தீனத்தின் காசா பகுதிகளில் ஹமாஸ் தீவிரவாதிகளின் இருப்பிடங்களை குறிவைத்து வான்வழி தாக்குதல்களை நடத்தி வருகிறோம். எங்களை பொறுத்தவரை ஹமாஸ் தீவிரவாதிகளை கூண்டோடு அழிக்க வேண்டும். காசா பகுதி ஆட்சி நிர்வாகத்தில் இருந்து அவர்களை முழுமையாக நீக்க வேண்டும். அடுத்த கட்ட போருக்கு தயாராகி வருகிறோம். இதன்படி காசாவில் தரைவழி தாக்குதல் நடத்த தயார் நிலையில் இருக்கிறோம். இவ்வாறு டேனியல் தெரிவித்தார்.