பிலிப்பைன்ஸை தாக்கிய சக்திவாய்ந்த சூறாவளி – 66 பேர் மரணம்
பிலிப்பைன்ஸை ஒரு சக்திவாய்ந்த சூறாவளி தாக்கி பாரிய சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த ஆண்டு மத்திய பிலிப்பைன்ஸைத் தாக்கிய மிக வலிமையான சூறாவளி இது என்று கூறப்படுகிறது. குறைந்தது 66 பேர் உயிரிழந்துள்ளனர். 400,000 க்கும் மேற்பட்டோர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.
மக்கள் வசிக்கும் நகரங்கள் உட்பட பெரிய பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதால், சூறாவளி பெருமளவில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக பிபிசி செய்தி வெளியிட்டுள்ளன.
இதுவரையிலான அறிக்கைகளின்படி, இறப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கூரைகளில் தஞ்சம் புகுந்த மக்கள் மற்றும் கார்கள், கப்பல் கொள்கலன்கள் அலைகளால் அடித்துச் செல்லப்பட்ட வீடியோக்களும் வெளியாகியுள்ளன.
இதற்கிடையில், நிவாரணப் பணிகளுக்காக நிறுத்தப்பட்டிருந்த ஒரு இராணுவ ஹெலிகாப்டர் வடக்கு மின்டானாவோ தீவில் (Mindanao Island) மோதியதில் ஆறு பணியாளர்கள் கொல்லப்பட்டதாக பிபிசி செய்தி வெளியிட்டுள்ளன.
மணிக்கு 130 கிலோமீட்டருக்கும் அதிகமான வேகத்தில் வீசும் காற்றுடன் சூறாவளி பிலிப்பைன்ஸை தாக்கியுள்ளது.
இன்று இது தென் சீனக் கடலைக் கடந்து நகரும் என்று கணிக்கப்பட்டுள்ளது. பிலிப்பைன்ஸை ஒவ்வொரு ஆண்டும் சுமார் 20 சூறாவளிகள் தாக்குவது வழக்கம்.





