ஜப்பானில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் – 33 பேர் படுகாயம்!
வடக்கு ஜப்பானில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் 33 பேர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அமோரி மாகாணத்தின் கடற்கரையிலிருந்து சுமார் 80 கிலோமீட்டர் தொலைவில், 7.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் நேற்று பதிவாகியது.
நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது. இந்நிலையில் நிலநடுக்கத்தினால் 33 பேர் படுகாயம் அடைந்துள்ளதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
அமோரிக்கு தெற்கே, இவாட் (Iwate) மாகாணத்தின் குஜி (Kuji) துறைமுகத்தில் 70 செ.மீ சுனாமி அலைகள் பதிவாகியுள்ளன.
அதே நேரத்தில் பிராந்தியத்தின் பிற இடங்களில் 50 செ.மீ வரை நீர்மட்டம் உயர்ந்துள்ளதாக ஜப்பான் வானிலை ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.
முன்னதாக, வானிலை ஆய்வு நிறுவனம் 3 மீ/10 அடி உயரம் வரை சுனாமி அலைகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுத்தது, 90,000 குடியிருப்பாளர்களை வெளியேற்ற உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.




