யாழ். வலி வடக்கில் 34 வருடங்களின் பின் பொங்கல்
யாழ்ப்பாணம் வலி வடக்கு நகுலேஸ்வரம் கிராம அலுவலர் பிரிவில் அமைந்துள்ள ஆலயத்திற்கு சுமார் 34 வருடங்களுக்கு பின்னர் மக்கள் சென்று வழிபட இராணுவத்தினர் அனுமதி வழங்கியுள்ளனர்.
உயர் பாதுகாப்பு வலயத்தினுள், அமைந்துள்ள ஶ்ரீமத் நாராயன சுவாமி ஆலயத்திற்கு செல்லவே இன்றைய தினம் வெள்ளிக்கிழமை அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இன்றைய தினம் வெள்ளிக்கிழமை முதல் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் இவ் ஆலயத்திற்கு சென்று வழிபாடுகளை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஆலயத்திற்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டதை அடுத்து, அப்பகுதியில் வசித்த மக்கள் இன்றைய தினம் ஆலயத்திற்கு சென்று வழிபட்டு பொங்கல் பொங்கினதுடன், ஆலய சூழலில் சிரமதான பணிகளையும் முன்னெடுத்தனர்.
அப்பகுதிகளில் இருந்து சுமார் 34 வருடங்களுக்கு முன்னர் இடம்பெயர்ந்த எம்மை மீள எமது சொந்த இடங்களில் குடியமர அனுமதிக்காத நிலையில், நாம் உறவினர்கள் , நண்பர்கள் வீடுகளிலும், வாடகை வீடுகளிலும் தான் வாழ்கிறோம்.
எமது ஆலயத்திற்கு வெள்ளிக்கிழமைகளில் வரவே தற்போது அனுமதி வழங்கியுள்ளனர்.
மிகவிரைவில் எம்மை எமது சொந்த இடங்களில் குடியமர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், ஆலயத்தை புனரமைத்து, தினமும் வழிபட அனுமதிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரியுள்ளனர்.