துருக்கியில் அரசியல் நெருக்கடி : நீதிமன்றப் பதவி நீக்கத்தை எதிர்கொள்ளும் எதிர்க்கட்சித் தலைவர்

துருக்கியின் பிரதான எதிர்க்கட்சி மீது வரலாறு காணாத சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஜனநாயகமா சர்வாதிகாரமா என்ற கேள்வி, அந்நாட்டு மக்களிடையே எழுந்துள்ளது.
சிஹெச்பி (CHP) கட்சி உறுப்பினரும் இஸ்தான்புல் மேயருமாகிய இக்ரம் இமமொக்லு, 19 மார்ச் அன்று 100 ஆதரவாளர்களுடன் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார். ஊழல் குற்றச்சாட்டை சுமத்தி துருக்கிய உள்நாட்டு அமைச்சு அவரை பதவிநீக்கம் செய்தது. மேலும் செப்டம்பர் 2 அன்று அந்தக் கட்சியில் முறைகேடு நடந்துள்ளது என்று குற்றஞ்சாட்டப்பட்டு, அதன் தலைவர் ஒஸ்குர் செலிக் நீதிமன்றத்தால் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.
துருக்கிய அதிபர் எர்டோவானின் அரசியல் எதிரியான இமமொக்லு சிறையில் இருப்பதால், ஒஸ்குர் ஒசல் தலைமை ஏற்று எதிர்க்கட்சியை வழிநடத்தி வருகிறார். ஆயினும் 2023ஆம் ஆண்டில் நடந்த எதிர்க்கட்சியின் கூட்டத்தில் சட்டவிரோதமான நடவடிக்கைகள் நடந்ததாக மேற்கோள்காட்டி துருக்கிய நீதிமன்றம் திங்கட்கிழமை (செப்டம்பர் 15) ஒசலையும் நீக்க முடிவெடுக்கலாம் என்று கூறப்படுகிறது. அதனால் எதிர்க்கட்சி தலைமையையும் தனது பலத்தையும் இழக்கும் அபாயம் எழுந்துள்ளது.
ஆளும் பழமைவாத ஏகேபி (AKP) கட்சியின் தலைவரான அதிபர் எர்டோவானின் 22 ஆண்டுகால ஆட்சியில் நீதிமன்றங்கள், ஊடகங்கள், மத்திய வங்கி, தனியார் அமைப்புகள் ஆகியன அவருக்குச் சாதகமாகவே செயல்படுவதாகவும் எதிர்க்கட்சிகள் கூறுகின்றன. ஏனெனில் எதிர்க்கட்சிமீது கடந்த அக்டோபர் மாதம் தொடங்கி பல சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
துருக்கியின் பிரதான எதிர்க்கட்சியான குடியரசு மக்கள் கட்சியின் ஆதரவாளர்கள் அங்காரா நகரில் அரசாங்கத்துக்கு எதிராக ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 14) அன்று பேரணி நடத்தினர். அதன்பிறகு மேலும் 48 எதிர்க்கட்சி ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.