இலங்கை செய்தி

காந்தள் மலர் இல்லம் குறித்து பொலிஸார் கேள்வி எழுப்புவது ‘இனவெறி அடக்குமுறை’

வடக்கில் பாடசாலையொன்றின் இல்ல விளையாட்டுப் போட்டிகள் தொடர்பாக அதிபர், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களிடம் பொலிஸார் கேள்வி எழுப்பியமை இனவாத அடக்குமுறை என நாட்டின் முன்னணி ஆசிரியர் சங்கம் ஒன்று கண்டனம் தெரிவித்துள்ளது.

தமிழ் தேசிய மலராக கருதப்படும் காந்தள் (கார்த்திகை பூ) மலரின் வடிவில் இல்லம் ஒன்று வடிவமைக்கப்பட்டுள்ளமை குறித்து பொலிஸார் விசாரணை நடத்தியுள்ளனர்.

பொலிஸாரின் நடவடிக்கையினால் பாடசாலை மாணவர்களின் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண அலுவலகத்தில் கடந்த ஏப்ரல் 2ஆம் திகதி முறைப்பாடு செய்திருந்தது.

பாடசாலைப் பாடப்புத்தகங்களிலும் இடம்பெற்றுள்ள பூக்களின் வடிவத்தை பயன்படுத்தி மாணவர்கள் தமது திறமைகளை வெளிப்படுத்த முடியாத வகையில் நெருக்கடியை ஏற்படுத்துவது இனவாதக் கோணத்தில் செயற்பபடுவதையே காட்டுவதாக இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.

யாழ்ப்பாணம் தெல்லிப்பளை யூனியன் கல்லூரியின் இல்ல விளையாட்டுப் போட்டிகள் கடந்த மார்ச் 30ஆம் திகதி இடம்பெற்ற நிலையில், அங்கு வந்த இராணுவத்தினரும் பொலிஸாரும் கவச வாகனம் மற்றும் காந்தள் மலர் வடிவத்தில் உருவாக்கப்பட்டிருந்த இல்லங்கள் குறித்து மாணவர்களிடம் விசாரணை நடத்தியதாக பிரதேச ஊடகவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

பின்னர் இவ்விடயம் தொடர்பில் விசாரிப்பதற்காக கடந்த மார்ச் 31 ஆம் திகதி தெல்லிப்பளை பொலிஸ் நிலையத்திற்கு வருமாறு குறித்த இல்லங்களின் சில மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பொலிஸார் அறிவித்திருந்தனர்.

கடந்த மார்ச் 31ஆம் திகதி தெல்லிப்பளை பொலிஸ் நிலையத்தில் மாணவர்களிடம், அந்த மாதிரிகளை வைத்து இல்லங்களை அமைக்குமாறு ஆசிரியர்களால் மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டதா என பொலிஸார் வினவியுள்ளனர், எனினும் மாணவர்கள், தாம் அன்றாடம் காண்கின்ற விடயங்களையும், தமது பாடப் புத்தகங்களில் பார்த்த விடயங்களையும் வைத்தே இல்லங்களை உருவாக்கியதாக பொலிஸாரிடம் தெரிவித்தனர்.

மேலும், மாணவர்கள் கூறுகையில், தாங்கள் உருவாக்கும் இல்லங்களில் அலங்காரங்கள் குறித்து ஆசிரியர்களுக்கு முன் கூட்டியே அறிவிக்கவில்லை எனவும், வருடத்திற்கு ஒரு முறை மாத்திரமே பூக்கும் காந்தள் மலரை ஏனையவர்களும் பார்ப்பதற்கான வாய்ப்பை வழங்கும் நோக்கில் இவ்வாறு இல்லத்தை உருவாக்கியதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

கடந்த ஏப்ரல் மாதம் 3ஆம் திகதி பாடசாலையின் அதிபரையும் பொலிஸ் நிலையத்திற்கு வரவழைத்ததாகவும் தெல்லிப்பளை பொலிஸார் அவரிடம் மாணவர்கள் உருவாக்கிய மாதிரிகள் தொடர்பில் வினவியதாகவும் பிரதேச ஊடகவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இலங்கை ஆசிரியர் சங்கம் செய்த முறைப்பாடு தொடர்பில் விசாரிப்பதற்காக, ஏப்ரல் 5ஆம் திகதி இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாணம் பிராந்திய அலுவலகத்தில் முன்னிலையாகுமாறு, தெல்லிப்பளை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்கு அறிவிக்கப்பட்டதாக மனித உரிமைகள் இணைப்பாளர் ரி.கனகராஜ் தெரிவிக்கின்றார்.

அன்றைய தினம், தெல்லிப்பளை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி வரவில்லை எனவும், அவர் சார்பில் பொலிஸ் நிலைய அதிகாரி ஒருவர் வந்ததாகவும், பொறுப்பதிகாரி விடுமுறையில் இருந்ததால் தான் முன்னிலையானதாக அந்த அதிகாரி கூறியதாகவும் ரி.கனகராஜ் பிரதேச ஊடகவியலாளர்களிடம் தெரிவித்தார்.

தெல்லிப்பளை பொலிஸ் நிலைய உயர் அதிகாரிகளிடமிருந்து கிடைத்த அறிவுறுத்தலின் பிரகாரம் பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் அதிபர் ஆகியோரிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸ் அதிகாரி தெரிவித்ததாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண இணைப்பாளர் ரி.கனகராஜ் மேலும் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

இந்த சம்பவம் வடக்கில் நடைபெற்று வரும் இனவாத அடக்குமுறையை காட்டுவதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் உப தலைவர் தீபன் திலீஷன் ஏப்ரல் 2ஆம் திகதி ஊடகங்களுக்கு வலியுறுத்தியிருந்தார்.

“அரசியலமைப்புக்கு எதிரான விடயங்கள் அங்கு காட்சிப்படுத்தப்பட்டாலோ அல்லது தடைசெய்யப்பட்ட விடயங்கள் அங்கு காட்சிப்படுத்தப்பட்டாலோ அதனை சட்ட வரையறைக்குள் கொண்டு வந்து விசாரணைகளை மேற்கொள்வது வேறு விடயம். எந்த வகையிலும் அரசியல் சாசனத்தில் தடை செய்யப்படாத, அதுபோல் எமது பாடப்புத்தகங்களில் காணப்படுகின்ற காந்தள் மலர் தொடர்பில் மாணவர்கள் தமது திறமையை வெளிப்படுத்த முடியாதளவுக்க நெருக்கடியும் அடக்குமுறையும் இங்கு நடக்கிறதென்றால், இது முழுமையாக இனவாத கோணத்திலேயே இடம்பெறுகிறது. எங்களால் இதனை அனுமதிக்க முடியாது.”

(Visited 18 times, 1 visits today)

Jeevan

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை