லண்டனில் யூத ஆம்புலன்ஸ்கள் தீக்கிரையான சம்பவம் – ஈரானிய அரசுக்கு தொடர்பு?
லண்டனின் கோல்டர்ஸ் கிரீன் பகுதியில் யூத தொண்டு நிறுவனத்திற்குச் சொந்தமான ஆம்புலன்ஸ்கள் தீக்கிரையாக்கப்பட்டமை தொடர்பாக, ஈரானிய அரசுடன் தொடர்பு இருக்கலாம் என சந்தேகிக்கப்படும் ஒரு குழுவை மையமாகக் கொண்டு விசாரணை நடைபெற்று வருகிறது என பெருநகர காவல்துறைத் தலைவர் தெரிவித்துள்ளார்.
திங்கட்கிழமை அதிகாலை இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் நான்கு ஹட்சோலா ஆம்புலன்ஸ்கள் தீக்கிரையாக்கப்பட்டன.
வாகனங்களில் இருந்த எரிவாயு சிலிண்டர்கள் வெடித்ததால் பல வெடிப்புகள் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த தாக்குதலில் மூன்று சந்தேக நபர்கள் ஈடுபட்டதாக காவல்துறை சந்தேகிக்கிறது. இதனை பயங்கரவாதச் சம்பவமாக அல்லாமல், யூத-எதிர்ப்பு வெறுப்புக் குற்றமாகவே தற்போது விசாரணை நடத்தப்படுகிறது.
பெருநகர காவல்துறைத் தலைவர் சர் மார்க் ரௌலி, ஈரானிய அரசின் அச்சுறுத்தல்கள் சமீப காலங்களில் அதிகரித்து வருவதாகக் கூறியுள்ளார்.
ஐரோப்பாவில் இடம்பெற்ற பிற தாக்குதல்களுக்கும் பொறுப்பேற்றதாகக் கூறப்படும், ஈரானுடன் தொடர்பு இருக்கலாம் என சந்தேகிக்கப்படும் ஒரு குழுவின் இணையவழிப் பதிவுகளும் விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
இந்தச் சம்பவத்தால் யூத சமூகத்தில் பெரும் பதற்றம் நிலவுகிறது. பாதுகாப்பை வலுப்படுத்தும் நடவடிக்கையாக, லண்டனில் 264 கூடுதல் காவல்துறை அதிகாரிகள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன், ஆயுதம் ஏந்திய ரோந்துப் பணிகளும் அதிகரிக்கப்பட்டுள்ளன.
இதற்கிடையில், தீக்கிரையான ஆம்புலன்ஸ்களுக்கு பதிலாக புதிய வாகனங்களை வழங்க அரசாங்கம் நிதியுதவி செய்யும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தாக்குதல் தொடர்பான விசாரணை தற்போது பயங்கரவாத எதிர்ப்பு பிரிவினரால் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.




