பாலஸ்தீன அதிபர் அப்பாஸ் உடன் பிரதமர் மோடி சந்திப்பு
அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, நியூயார்க்கில் பாலஸ்தீன அதிபர் அப்பாஸை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, பிராந்தியத்தில் விரைவாக அமைதி திரும்ப இந்தியாவின் ஆதரவை உறுதிப்படுத்தினார்.
ஐக்கிய நாடுகள் பொது அவை அமர்வில் பங்கேற்பதற்காக நியூயார்க் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, அங்கு நேபாள பிரதமர் கே.பி ஒளி, குவைத் இளவரசர் ஷேக் சபா கலீத் அல்-ஹமத் அல்-சபா, பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸ் உள்ளிட்டோரைச் சந்தித்தார்.
மஹ்மூத் அப்பாஸ் உடனான சந்திப்பின்போது, பாலஸ்தீன மக்களுக்கான இந்தியாவின் உறுதியான ஆதரவை வெளிப்படுத்தினார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “நியூயார்க்கில் அதிபர் மஹ்மூத் அப்பாஸை சந்தித்தேன். பிராந்தியத்தில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை விரைவாக மீட்டெடுப்பதற்கு இந்தியாவின் ஆதரவை மீண்டும் வலியுறுத்தினேன். பாலஸ்தீன மக்களுடனான நீண்டகால நட்பை மேலும் வலுப்படுத்துவது பற்றிய கருத்துகளை பரிமாறிக் கொண்டேன்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக இந்திய அரசு வெளியிட்டுள்ள பதிவில், “ஐநா பொது அவை நிகழ்ச்சியின் இடையே, பிரதமர் நரேந்திர மோடி பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸ்-ஐ சந்தித்தார். அப்போது, காஸாவில் நிலவும் மனிதாபிமான நெருக்கடி மற்றும் பிராந்தியத்தில் மோசமடைந்து வரும் பாதுகாப்பு நிலைமை குறித்து ஆழ்ந்த கவலையை பிரதமர் வெளிப்படுத்தினார். பாலஸ்தீன மக்களுக்கு தொடர்ச்சியான மனிதாபிமான உதவி உட்பட இந்தியாவின் அசைக்க முடியாத ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்தினார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இஸ்ரேல் – பாலஸ்தீனம் எனும் இரு நாடுகளின் அங்கீகாரமே பிரச்சினைக்குத் தீர்வை அளிக்கும் என்றும், இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்துக்கும் இடையே போர்நிறுத்தம் ஏற்பட வேண்டும் என்றும், பணயக்கைதிகளை விடுவிப்பது, பேச்சுவார்த்தைக்கு திரும்புவது ஆகியவை நடைபெற வேண்டும் என்றும் பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.