கொத்து கொத்தாக மயங்கி விழுந்தவர்களால் பரபரப்பு
நடிகர் விஜய், தமிழக வெற்றிக் கழகம் என்கிற அரசியல் கட்சியை கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கினார். அக்கட்சியின் முதல் மாநாடு இன்று மாலை விக்ரவாண்டியில் உள்ள வி சாலை எனும் கிராமத்தில் நடைபெற்றது.
இந்த மாநாட்டுக்காக 50 ஆயிரம் இருக்கைகளுடன் கூடிய திடல் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த மாநாட்டில் கலந்துகொள்வதற்காக நேற்றில் இருந்தே ரசிகர்கள் விக்கிரவாண்டி நோக்கி படையெடுக்க தொடங்கினர்.
மாநாட்டில் கலந்துகொள்ள வருபவர்கள் சிரமமின்றி உள்ளே செல்ல மொத்தம் 5 நுழைவு வாயில்கள் அப்பகுதியில் அமைக்கப்பட்டு உள்ளது. அதேபோல் மாநாடு முடிந்து விரைவாக வெளியே செல்ல 15 வெளியேறும் வழிகளும் தனியாக அமைக்கப்பட்டுள்ளன.
மாநாட்டுக்கு வரும் வாகனங்களை பார்க்கிங் செய்ய சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இரண்டு பிரம்மாண்ட வாகன நிறுத்தும் இடம் அமைக்கப்பட்டு உள்ளது. மாநாட்டு திடலின் இருபுறமும் இந்த பார்க்கிங் ஏரியாக்கள் அமைக்கப்பட்டு உள்ளன. கார்கள், பஸ், வேன்கள் என மொத்தம் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்களை இந்த பார்க்கிங் ஏரியாவில் நிறுத்திக் கொள்ள முடியுமாம். அதுமட்டுமின்றி மாநாட்டுக்கு வரும் மக்களுக்கு தேவையான உணவு மற்றும் தண்ணீர் வசதியும் செய்யப்பட்டு உள்ளது.
இது ஒருபுறம் இருக்க மாநாடு நடைபெறும் பகுதியில் வெயில் சுட்டெறித்து வருவதால் அங்கு குவிந்துள்ள மக்கள் வெப்பம் தாங்க முடியாமல் மயங்கி விழுந்துள்ளனர். சுமார் 80க்கும் மேற்பட்டோர் மயங்கி விழுந்ததால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
இதேவேளை தளபதியை பார்க்க வந்த மூவர் விபத்தில் உயிரிழந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.