இணையத்தில் தவறான தகவல்களைப் பரப்பும் சமூக ஊடகங்களுக்கு அபராதம்; ஆஸ்திரேலியா
இணையத்தில் தவறான கருத்துகளும் தகவல்களும் பரவுவதைத் தடுக்கத் தவறும் சமூக ஊடக நிறுவனங்களுக்கு அவற்றின் உலகளாவிய வருவாயில் 5 சதவீதம் வரை அபராதம் விதிக்கப்படும் என ஆஸ்திரேலியா எச்சரித்துள்ளது.
ஊறு விளைவிக்கும் பொய்யான தகவல்கள் இணையத்தில் பரவுவதைத் தடுக்கும் வகையில் நடத்தை விதிகளைச் சமூக ஊடக நிறுவனங்கள் வகுக்க வேண்டுமெனவும் அந்த விதிகள் முறைப்படுத்தும் அமைப்பால் அங்கீகரிக்கப்பட வேண்டுமெனவும் அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது.
அந்த முறைப்படுத்தும் அமைப்பின் தரநிலைகளைச் சமூக ஊடக நிறுவனங்கள் வகுக்கும் விதிகள் எட்டவில்லையென்றால், அந்நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்றும் அது கூறியுள்ளது.
ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் வியாழக்கிழமை (செப்டம்பர் 12) தாக்கல் செய்யப்படும் இந்த மசோதா, தவறான கருத்துகளால் தனி நபரையோ ஒரு குழுவையோ காயப்படுத்துபவர்களையும் தேர்தலையும் பொதுச் சுகாதாரத்தையும் சீர்குலைக்கும் நோக்கில் பொய்யானத் தகவல்களைப் பரப்புபவர்களையும் கட்டுப்படுத்துவதற்காகக் கொண்டுவரப்பட்டது.
“இணையத்தில் பரப்பப்படும் தவறான தகவல்கள் ஆஸ்திரேலியர்களின் பாதுகாப்புக்கும் நல்வாழ்வுக்கும் நாட்டின் ஜனநாயகம், சமூகம், பொருளாதாரம் ஆகியவற்றிற்கும் கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்துகின்றன,” என்று ஆஸ்திரேலியா தகவல், தொடர்பு அமைச்சர் மிச்செல் ரோலண்ட் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.