வாயிலுள்ள பாக்டீரியாவால் புற்றுநோய் ஏற்படும் அபாயம் – புதிய ஆய்வில் அதிர்ச்சி தகவல்

வாய்வழியான சுகாதாரத்தை சரியான முறையில் பின்பற்றாதவர்களுக்கு புற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளதாக புதிய ஆய்வொன்றில் கண்டறியப்பட்டுள்ளது.
வாய்வழி சுகாதாரக்குறைவால், குறிப்பாக வாயில் வாழும் பாக்டீரியா மற்றும் பூஞ்சைகளால் கணையப் புற்றுநோயை உருவாக்கும் அபாயம் உள்ளதாக தெரியவந்துள்ளது.
இதன் ஆபத்து மூன்று மடங்காக அதிகரிக்கக்கூடும் என்று நியூயோர்க் பல்கலைக்கழக மருத்துவ பல்கலைக்கழகம் நடத்திய புதிய ஆய்வு தெரிவித்துள்ளது.
ஜமா ஒன்கொலொஜி (JAMA Oncology) இதழில் வெளியான இந்த ஆய்வில், 900 பேரின் உமிழ்நீர் மாதிரிகள் ஒன்பது ஆண்டுகளுக்கு மேல் கண்காணிக்கப்பட்டது. இதன்போது புற்றுநோய் உள்ளவர்களிடம் சில குறிப்பிட்ட வகை பாக்டீரியா மற்றும் ஈஸ்ட் வகை பூஞ்சைகள் அதிகம் காணப்பட்டதை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
கேண்டிடா என்ற பூஞ்சை வகை கணையப் புற்றுநோயில் பங்கு வகிக்கலாம், வாய்வழி நுண்ணுயிரிகள் சில நேரங்களில் பீரியண்டால்ட் நோயையும், அதன் வழியாக புற்றுநோயையும் தூண்டும், தீங்கு விளைவிக்கும் நுண்ணுயிரிகள் அதிகமுள்ளவர்கள், மற்றவர்களை விட கணையப் புற்றுநோயில் சிக்க வாய்ப்பு 3 மடங்கு அதிகமாகும்.
வாய்வழி சுகாதாரம் புற்றுநோய் தடுப்பில் முக்கிய பங்கு வகிக்கலாம் என்பதை ஆராய்ச்சியாளர்கள் வலியுறுத்துகின்றனர். பல் துலக்குதல் மற்றும் வாயை சுத்தம் செய்வது போன்ற தினசரி நடைமுறைகள், பீரியண்டால் நோயை மட்டுமின்றி புற்றுநோயையும் தடுக்கும் சாத்தியமுள்ளது என அவர்கள் கூறுகின்றனர்.
பசியின்மை, எடை இழப்பு, மஞ்சள் காமாலை, அரிப்பு, நிறமாறிய சிறுநீர், மலச்சிக்கல் உள்ளிட்ட அறிகுறிகள் நீடித்தால், மருத்துவரை அணுக வேண்டியது அவசியம்.
கணையம் என்பது செரிமானமும், ஹார்மோன் உற்பத்தியும் நிர்வகிக்கும் முக்கிய உறுப்பாகும். இது பாதிக்கப்படும்போது, புற்றுநோயின் விளைவுகள் ஆபத்தாக இருக்கலாம்.
புகைபிடித்தல் மற்றும் உடல் பருமனும் முக்கிய காரணிகள் என்ற வகையில், இந்த ஆய்வு வாய்வழி சுகாதாரத்தின் முக்கியத்துவத்தைக் கூடுதலாக சுட்டிக்காட்டுகிறது.