பலஸ்தீன ஆதரவு உண்ணாவிரதப் போராட்டம் – 69 நாட்களாக உணவு இல்லாத கைதியின் உயிருக்கு ஆபத்து
பலஸ்தீன ஆதரவு அதிரடி குழுவைச் சேர்ந்த ஒரு கைதி, 69 நாட்களாக உணவு இல்லாமல் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால், அவரது உயிருக்கு அபாயம் காணப்படுவதாக முன்னணி மருத்துவர் ஒருவர் எச்சரித்துள்ளார்.
தடுப்புக் காவலில் உள்ள மூன்று கைதிகள், உடனடி பிணை உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து இந்த போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.
அவர்களில் ஒருவர் இதுவரை ஐந்தாவது முறையாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வழக்கறிஞர்களின் கூற்றுப்படி, இந்த கைதிகள் விசாரணை முடிவடைவதற்கு முன் ஒரு வருடத்திற்கும் மேலாக காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இது பிரித்தானிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டுள்ள ஆறு மாத காவல் காலக்கெடுவை விட அதிகம் என தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், சிறைச்சாலை அமைச்சர் லார்ட் டிம்ப்சன், கைதிகள் மீது கடுமையான குற்றச்சாட்டுகள் உள்ளதாகவும், தடுப்புக் காவல் தொடர்பான முடிவுகள் சுயாதீன நீதிபதிகளால் எடுக்கப்படுகின்றன என்றும் தெரிவித்துள்ளார்.
31 வயதான ஹெபா முரைசி, சுமார் 70 நாட்களாக உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வருவதால், அவரது உடல்நிலை மெதுவாக மோசமடைந்து வருவதாக கூறப்படுகிறது.
அவர் 10 கிலோவிற்கும் அதிகமான நிறையை இழந்துள்ளதாகவும், கடும் சோர்வு, தலைவலி, தலைச்சுற்றல் மற்றும் குமட்டல் போன்ற பாதிப்புகளை அனுபவித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், 28 வயதான கம்ரான் அகமது, தனது உண்ணாவிரதப் போராட்டத்தின் 58 ஆவது நாளில் இதயக் கோளாறு காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், 50 எம்.பி.க்கள் கையெழுத்திட்ட கடிதம் ஒன்று, உண்ணாவிரதப் போராட்டக்காரர்களின் உடல்நிலை குறித்து தீவிர கவலை தெரிவித்து,
அரசாங்கம் மனிதாபிமான அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.
நரம்பியல் நிபுணர் டொக்டர் டேவிட் நிக்கோல், நீண்டகால உண்ணாவிரதம் நிரந்தர உடல் சேதம் மற்றும் மரண அபாயத்தை ஏற்படுத்தக்கூடும் என்றும்,
குறிப்பாக உண்ணாவிரதத்தை நிறுத்தும் போது ஏற்படும் “ரீஃபீடிங் சிண்ட்ரோம்” மிகப் பெரிய ஆபத்தாக இருக்கலாம் என்றும் எச்சரித்துள்ளார்.





