இந்திய தாக்குதல் பற்றி மனம் திறந்த பாகிஸ்தான் பிரதமர்

இந்தியா தாக்குதல் நடத்தியது பற்றி பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் முதன்முறையாக வெளிப்படையாகப் பேசியுள்ளார்.
கடந்த 10ஆம் திகதி அதிகாலை 2.30 மணி அளவில் அந்தத் தகவலை இராணுவ தளபதி ஜெனரல் அசிம் முனீர் தன்னிடம் தெரிவித்ததாக அவர் கூறியுள்ளார்.
இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற நிகழ்வில் இதனை அவர் தெரிவித்துள்ளார்.
“10ஆம் திகதி அதிகாலை 2.30 மணி அளவில் எனக்கு ஜெனரல் முனீர் தொலைபேசியில் அழைத்தார். அப்போது நமது நாட்டின் முக்கிய விமான தளங்கள் மீது இந்தியா தாக்குதல் நடத்தியுள்ளதாக அவர் கூறினார். அது மிகவும் சங்கடம் தந்த தருணம்” என பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கூறியுள்ளார். இந்தியாவின் ‘ஆபரேஷன் சிந்தூர்’ ராணுவ நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்த தாக்குதல் நடந்துள்ளதாக தெரிகிறது.
“பாகிஸ்தானும் இந்தியாவும் அமைதியான அண்டை நாடுகளைப் போல காஷ்மீர் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளைத் பேசி தீர்த்துக் கொள்ள வேண்டும். அமைதி நிலவினால் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளிலும் நம்மால் ஒத்துழைக்க முடியும்” என ஷெபாஸ் ஷெரீப் கூறியுள்ளார்.
காஷ்மீர் உள்ளிட்ட அனைத்து சர்ச்சைக்குரிய பிரச்சினைகளுக்கும் தீர்வு காண இந்தியாவுடன் ஒருங்கிணைந்த பேச்சுவார்த்தை நடத்த பாகிஸ்தான் தயாராக உள்ளது என்று அந்நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சரும், துணை பிரதமருமான இஷாக் தர் விருப்பம் தெரிவித்துள்ளார்.