இஸ்தான்புல் பேச்சுவார்த்தையை அடுத்து போர் நிறுத்தத்தை நீட்டிக்க பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் ஒப்புதல்
பாகிஸ்தானுக்கும், ஆப்கானிஸ்தானுக்கும் இடையிலான போா் நிறுத்தத்தை நீடிக்க இரு நாடுகளும் நேற்று (31) ஒப்புக்கொண்டன. மேலும், அமைதிப் பேச்சுவாா்த்தையை மீண்டும் தொடங்கவும் இரு நாடுகளும் சம்மதித்துள்ளன.
இது குறித்து இரு நாட்டின் பிரதிநிதிகளுக்கும் இடையே பேச்சுவாா்த்தை நடத்திவைத்த துருக்கி அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதியில் ஒக்டோபா் 15ம் திகதி அமுலுக்கு வந்த போா் நிறுத்தத்தை தொடா்ந்து கடைப்பிடிக்க இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டுள்ளனா். அந்த போா் நிறுத்த அமுலாக்கம் குறித்து இரு நாட்டு பிரதிகளும் தொடா்ந்து ஆலோசனை நடத்துவாா்கள்.
இரு நாடுகளின் உயா்நிலை தலைவா்களும் இஸ்தான்புல்லில்(Istanbul) நவம்பா் 6ம் திகதி நேரில் சந்தித்துப் பேசவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
எல்லை போா் நிறுத்தம் அமுலில் இருக்கும் நேரத்தில், அது முழுமையாக அமுல்படுத்தப்படுவதை உறுதிப்படுத்தும் வகையில் கண்காணிப்பு கட்டமைப்பை உருவாக்க வேண்டும் என்பதை இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டனா்.
இத்தகைய உடன்பாட்டை எட்டியதற்காக, மஸ்தியஸ்த நாடுகளான துருக்கியும் கட்டாரும் பாகிஸ்தான், ஆப்கான் குழுவினருக்கு பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்கின்றன.
பாகிஸ்தான் – ஆப்கன் எல்லையில் நிரந்தர அமைதியை ஏற்படுத்துவற்காக துருக்கியும் கத்தாரும் முயற்சிகளைத் தொடா்ந்து மேற்கொள்ளும் என்று அந்தக் கூட்டறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.





