கோவையில் ஆரஞ்சு எச்சரிக்கை… சித்திரை சாவடி அணையில் குளித்து மகிழ்ந்த பொதுமக்கள்
கோவை மாவட்டத்திற்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடப்பட்டுள்ள நிலையில் கடந்த சில தினங்களாகவே பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக மாலை வேலைகளில் மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் நீர் நிலைகள் நிரம்ப துவங்கியுள்ளன.
இந்நிலையில் கோவையில் கடந்த சில தினங்களாக பெய்த கனமழையின் காரணமாக நொய்யல் ஆற்றில் நீர் வரத்து அதிகரித்துள்ளது.
இந்நிலையில் நொய்யல் ஆறு வரும் வழித்தடமான சித்திரை சாவடி அணையில் நீண்ட நாட்களுக்குப் பிறகு நீர் வர துவங்கியதால் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் குளித்து விளையாடி மகிழ்ந்து வருகின்றனர். அதுமட்டுமின்றி அவ்வழியாக செல்லும் பொதுமக்களும் குடும்பத்துடன் சித்திரை சாவடி அணையில் குளித்து வருகின்றனர்.
அதேசமயம் கனமழை பெய்கின்ற காலங்களில் சில நேரத்தில் இங்கு நீரின் ஓட்டம் அதிகரிக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.