தொடரும் உதவிகள்: தமிழக நிவாரணமும் கையளிப்பு!
இலங்கை மக்களுக்காக, தமிழக அரசினால் அனுப்பி வைக்கப்பட்ட 300 மெட்ரிக் தொன் அவசர நிவாரணப் பொருட்கள் நேற்று அதிகாரப்பூர்வமாக கையளிக்கப்பட்டது.
தமிழக அரசினால் அனுப்பப்பட்ட 1000 தொன் நிவாரணப் பொருட்களில் ஒரு பகுதியான 300 மெட்ரிக் தொன் பொருட்கள், இந்திய கடற்படையின் 3 தரையிறங்கு கலங்கள் மூலம், கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தன.
மேலும் 700 தொன் உதவிப் பொருட்களை ஏற்றிய மற்றொரு கப்பல் இன்று காலை திருகோணமலையை வந்தடையவுள்ளது.
கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த பொருட்களை, இந்திய தூதுவர் சந்தோஷ் ஜா, வர்த்தக மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் வசந்த சமரசிங்கவிடம் ஒப்படைத்தார்.
அதேவேளை, பேரிடர் நிவாரணப் பொருட்களுடன், ஐக்கிய அரபு எமிரேட்சின் ஒன்பதாவது விமானம் நேற்று பிற்பகல் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கியது.
பாதிக்கப்பட்ட மக்களுக்கான 13,482 கிலோ கூடாரங்கள் மற்றும் பயண பாய்களுடன் இந்த விமானம் இலங்கை வந்தடைந்தது.
இந்த உதவிப் பொருட்களை இராணுவ அதிகாரிகள், பேரிடர் முகாமைத்துவ மைய அதிகாரிகள் மற்றும் வெளியுறவு அமைச்சின் பிரதிநிதிகள் விமான நிலையத்தில் பொறுப்பேற்றுள்ளனர்.





