பிரித்தானிய இளவரசர் ஆண்ட்ரூ மீது ஊழல் நிதிப் புகார்
பிரித்தானிய இளவரசர் ஆண்ட்ரூ (Andrew) தனது சொகுசு பங்களாவை விற்றதில், பாரிய ஊழல் மற்றும் பண மோசடி நடந்திருக்கலாம் என பிபிசி புலனாய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கசாக்ஸ்தான் கோடீஸ்வரர் திமூர் குலிபாயேவ் (Timur Kulibayev) , இந்த சொத்தை வாங்குவதற்கு ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான ஒரு நிறுவனத்திடமிருந்து நிதியைப் பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது.
கடந்த 2007-ஆம் ஆண்டு, சந்தை விலையை விட 7 மில்லியன் பவுண்டுகள் கூடுதலாக வழங்கப்பட்டு, 15 மில்லியன் பவுண்டுகளுக்கு இந்த இல்லம் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
இத்தாலிய எண்ணெய் நிறுவன முறைகேடுகளில் கைமாறிய லஞ்சப் பணமே, இளவரசரின் சொத்தை வாங்கப் பயன்படுத்தப்பட்டதாக நீதிமன்ற ஆவணங்கள் சுட்டிக்காட்டுகின்றன.
இது ஒரு “வெளிப்படையான பண மோசடி” நடவடிக்கை என நிபுணர்கள் எச்சரித்துள்ள நிலையில், இது குறித்து முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என கோரிக்கைகள் எழுந்துள்ளன. இருப்பினும், இந்த விவகாரம் குறித்துக் கருத்து தெரிவிக்க இளவரசர் ஆண்ட்ரூ மற்றும் பக்கிங்ஹாம் அரண்மனை இதுவரை முன்வரவில்லை.
சட்டவிரோதப் பணத்தைக் கையாண்டது தொடர்பாக இளவரசர் மீது தற்போது கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.





