பிரித்தானியாவில் கோர விபத்து – கடமையில் இருந்த 27 வயது பொலிஸ் அதிகாரி உயிரிழப்பு
பிரித்தானியாவில் ஸ்வான்லியில் அவசர அழைப்புக்கு பதிலளித்து கொண்டிருந்தபோது இடம்பெற்ற கார் விபத்தில் காயமடைந்த இளம் பொலிஸ் அதிகாரி உயிரிழந்துள்ளார்.
கடந்த வியாழக்கிழமை ஃபார்னிங்ஹாமில் (Farningham,) இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த அவர் இன்றைய தினம் உயிரிழந்துள்ளதாக கென்ட் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸாரின் வாகனமும் காரொன்றும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து சம்பவித்தது.
27 வயதான பிராட்லி கோர்க் (Bradley Cork) என்ற அதிகாரியே விபத்தில் உயிரிழந்துள்ளார்.
அதே வாகனத்தில் இருந்த மற்றொரு பொலிஸார் கவலைக்கிடமான நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
மேலும், மற்றைய வாகனத்தில் இருந்த ஒருவரும் படுகாயங்களுடன் சிகிச்சை பெறுகிறார்.
ஆபத்தில் இருந்தவர்களின் உயிரைக் காப்பாற்ற முயன்றபோது, பிராட்லி கோர்க் (Bradley Cork) தன்னலமின்றி செயல்பட்டார் என்று காவல்துறை தெரிவித்துள்ளது. அவரது வீரமும் அர்ப்பணிப்பும் என்றும் நினைவுகூரப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.
2022 முதல் சேவையில் இருந்த அவர், தனது குடும்பத்தினரும் சக ஊழியர்களாலும் பெரிதும் நேசிக்கப்பட்டவர் எனவும்,
இந்த இழப்பு அனைவரையும் அதிர்ச்சியிலும் துயரத்திலும் ஆழ்த்தியுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்தை நேரில் பார்த்தவர்கள் அல்லது தொடர்புடைய தகவல்கள் உள்ளவர்கள் கென்ட் காவல்துறை (Kent Police) உடன் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.




