‘இந்தியாவிற்கு மட்டுமல்ல உலகம் முழுவதற்கும் ஆன்மீகம் தேவை’ – மீண்டும் இமயமலை கிளம்பிய ரஜினி
ஒவ்வொரு வருடமும் இமயமலை பாபாஜி குகை, கேதர்நாத், பத்ரிநாத் உள்ளிட்ட இடங்களுக்கு ஆன்மிக சுற்றுலா செல்வதை வழக்கமாக வைத்திருக்கிறார் ரஜினி. உடல்நிலை மற்றும் கொரோனா காரணமாக இடையில் சில வருடங்கள் செல்லாமல் இருந்தார். ஆனால், கடந்த வருடம் அவர் மீண்டும் தனது இமயமலை பயணத்தைத் தொடங்கினார்.
நடிகர் ரஜினிகாந்த் சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லி வழியாக இமயமலை புறப்பட்டு செல்வதற்காக சென்னை விமான நிலையம் வந்தார்
அப்பொழுது பத்திரிகையாளர்களை சந்தித்த அவர் பேசுகையில்,ஆன்மீகம் மிக முக்கியமான ஒன்று,சாந்தியும் சமாதானமும் கடவுள் நம்பிக்கை நிலவுவதற்கு ஆன்மீகம் தேவைப்படுகிறது.என்னுடைய முதல் இமயமலை பயணத்தில் போது புது அனுபவம் கிடைத்ததால் ஒவ்வொரு வருடமும் இமயமலை செல்கிறேன்.
இந்தியாவிற்கு மட்டுமல்ல உலகம் முழுவதற்கும் ஆன்மீகம் தேவைப்படுகிறது.உங்கள் பயணத்தில் புதிய இந்தியா பிறக்குமா என கேட்டதற்கு ஒரு சிரிப்போடு வேண்டிக்கொள்கிறேன் என பதில் அளித்து சென்றார்.
‘ஜெய்பீம்’ ஞானவேல் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் ‘வேட்டையன்’ படப்பிடிப்பை முடித்துள்ளார். இதனை அடுத்து ஓய்விற்காக கடந்த வாரத்தில் அபுதாபி சென்று நேற்று முன்தினம் சென்னை திரும்பினார். இதனை அடுத்து, இன்று அதிகாலை ஒரு வாரகால ஆன்மிக பயணமாக இமயமலை கிளம்பி இருக்கிறார்.