வடக்கு கிழக்கு தமிழர்களுக்கு இதுவரை சுதந்திரம் கிடைக்கவில்லை- மாணவர்களின் கவனயீர்ப்பிற்கு அணிதிரளுமாறு ரவிகரன் எம்.பி அழைப்பு
இலங்கைக்கு சுதந்திரம் கிடைத்து 78 ஆண்டுகள் ஆகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்ற போதும் வடக்கு, கிழக்கிலுள்ள தமிழ் மக்களுக்கு இதுவரை சுதந்திரம் கிடைக்கவில்லையென வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் சுட்டிக்காட்டியுள்ளார்.
“ஸ்ரீலங்காவின் சுதந்திரநாள் தமிழர்களுக்கு கரிநாள்” எனும் கவனயீர்ப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கும் வகையில்
ஊடகங்களுக்கு இன்று கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனை சுட்டிக்காட்டினார்.
இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர்,
நாளையதினம் யாழ்ப்பாண பல்கலைக் கழகமாணவர்களின் ஒழுங்குபடுத்தலில் வடக்கில் கிளிநொச்சியிலும், கிழக்கில் மட்டக்களப்பிலும் இடம்பெறவுள்ள “ஸ்ரீலங்காவின் சுதந்திரநாள் தமிழர்களுக்கு கரிநாள்” என்னும் கவனயீர்ப்பு போராட்டத்திற்கு தமிழ் மக்கள் அனைவரும் அணிதிரண்டு ஆதரவு நல்க வேண்டும்.
கடந்த 1948 ஆம் ஆண்டு இலங்கை சுதந்திரமடைந்ததாகக் கூறப்படும் நாள் தமிழ் மக்களால் நேசிக்கப்படக்கூடியதாகவோ, கொண்டாடக்கூடியதாகவோ இல்லை.
தமிழர்களுக்கு விடிவு என்பது இல்லாத ஒன்றாகவே நோக்கப்படுகின்றது. ஒடுக்குமுறைகள் மிக அதிகமாகி வஞ்சிக்கப்பட்ட தமிழ் மக்களே ஏராளம்.
நாட்டின் தற்போதைய ஆட்சியாளர்கள்கூட முன்னைய ஆட்சியாளர்களால் வஞ்சிக்கப்பட்டார்கள். ஆனால் இதுவரை எமக்குத்தான் விடிவில்லாமல்
அலைகின்றோம் எனத் தமிழ் மக்கள் தொடர்ந்தும் துன்பப்படுகின்றார்கள்.
தமிழர் தாயகப்பரப்புகளில் தொடர்சியாக நிலஆக்கிரமிப்புக்கள், பௌத்தமயமாக்கல்கள் மேற்கொள்ளப்படுகின்றன. அத்தோடு தமிழர் தாயகப் பகுதிகளில் தமிழர்களைச் சிறுபான்மையினராக்குவதற்காக திட்டமிட்டு பெரும்பான்மையினக் குடியேற்றங்களும் மேற்கொள்ளப்படுகின்றன.
இதுதவிர வலிந்துகாணாமல் ஆக்கப்பட்டோருக்கு இதுவரை நீதி வழங்கப்படாமை, சிறையில் வாடும் தமிழ் அரசியல்கைதிகள் இதுவரை விடுக்கப்படாமை, தமிழர்கள் தமக்கான அரசியல் தீர்வாக சமஷ்டியைக் கோருகின்றபோதும் இதுவரை ஆட்சியாளர்கள் அதற்கு செவிசாய்க்காத நிலை, முள்ளிவாய்க்கால் தமிழ் இனப்படுகொலைக்கான பொறுப்புக்கூறல் மற்றும் நீதி இதுவரை வழங்கப்படாமை என இந்தநாட்டில் தமிழர்கள் ஆட்சியாளர்களால் தொடர்ச்சியாக பலவழிகளிலும் வஞ்சிக்கப்பட்டுவருகின்றனர்.
இந்நிலையில் எவ்வாறு இலங்கையின் சுதந்திரதினத்தை கொண்டாடுவது என்ற எண்ணத்தில்தான் தமிழ் மக்கள் இருக்கின்றனர்.
குறிப்பாக வடக்கு, கிழக்கிலுள்ள அரச அலுவலகங்களில்கூட இலங்கை சுதந்திரதினம் மனமகிழ்வோடு கொண்டாடப்படுவதில்லை. ஒரு சம்பிரதாய செயற்பாடாகவே சுதந்திரதினச் செயற்பாடுகள் மேற்கொள்ளப்டுகின்றன.
எங்களுடை இளைஞர்களே எங்களுடைய எதிர்காலம். ஒவ்வொரு வருடமும் பெப்ரவரி 04 ஆம்திகதி பல்கலைக்கழகசமூகம் “ஸ்ரீலங்காவிற்கு சுதந்திரநாள் தமிழர்களுக்கு கரிநாள்” என்று ஆட்சியாளர்களுக்கு நினைவூட்டி வருகின்றனர்” என்றார்.





