தென்கொரிய அதிபர் மாளிகை வளாகத்தை அலங்கோலப்படுத்திய வடகொரியாவின் குப்பைப் பலூன்கள்
வடகொரியா அனுப்பிய ‘குப்பைப் பலூன்கள்’ தென்கொரிய அதிபர் மாளிகையில் குப்பைகளைச் சிதறடித்துள்ளன.இந்தச் சம்பவம் ஜூலை 24ஆம் திகதியன்று நிகழ்ந்தது.
இதையடுத்து, அந்தக் குப்பைகளில் ஏதேனும் ரசாயனம் அல்லது கதிர்வீச்சு உள்ளனவா என்பதை சோதனையிட தென்கொரியா சிறப்புக் குழு ஒன்றை அங்கு உடனடியாக அனுப்பி வைத்தது.
தென்கொரிய அதிபர் மாளிகையை அசுத்தப்படுத்திய குப்பைகளை அக்குழுவினர் எடுத்துச் சென்றுவிட்டதாக தென்கொரிய அதிபர் மாளிகையின் பாதுகாப்புப் பிரிவு தெரிவித்தது.
விசாரணைக்குப் பிறகு, அந்தக் குப்பைகளால் எவ்வித ஆபத்தும் இல்லை என்று தென்கொரிய அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.
கடந்த மே மாதத்திலிருந்து தென்கொரியாவை நோக்கி ‘குப்பைப் பலூன்களை’ வடகொரியா பறக்கவிட்டு வருகிறது.ஆனால் அதிகமாகப் பாதுகாக்கப்படும் தென்கொரிய அதிபர் மாளிகையின் வளாகத்துக்குள் வடகொரியா அனுப்பிய ‘குப்பைப் பலூன்கள்’ விழுந்திருப்பது இதுவே முதல்முறை.
தென்கொரிய அதிபர் மாளிகைக்கு மேல், சுற்றியுள்ள பகுதிகளில் விமானங்கள் பறப்பதற்கு அனுமதி இல்லை.அப்படியிருக்க இந்தக் ‘குப்பைப் பலூன்கள்’ அவ்விடத்துக்குள் எப்படி நுழைந்தன என்ற கேள்வி எழுந்துள்ளது.