அமெரிக்க நிறுவனத்திற்கு அதிகளவு விண்ணப்பிக்கும் வடகொரியர்கள் – பின்னணி என்ன?
அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனமான அமேசான், வட கொரிய செயல்பாட்டாளர்கள் என சந்தேகிக்கப்படும் நபர்களிடமிருந்து கிடைக்கப்பெற்ற 1,800 க்கும் மேற்பட்ட வேலை வாய்ப்பு விண்ணப்பங்களை நிராகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது.
கிழக்கு ஆசிய நாடு தனது அணு ஆயுதத் திட்டத்திற்காக பணம் ஈட்டவும் மோசடி செய்யவும் வெளிநாடுகளில் ஐடி ஊழியர்களை பணியமர்த்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள நிலையில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அமேசான் தலைமை பாதுகாப்பு அதிகாரி ஸ்டீபன் ஷ்மிட் (Stephen Schmidt), வட கொரியர்கள் “உலகெங்கிலும் உள்ள நிறுவனங்களில், குறிப்பாக அமெரிக்காவில் உள்ள நிறுவனங்களில் தொலைதூர ஐடி வேலைகளைப் பெற முயற்சித்து வருவதாக சுட்டிக்காட்டியுள்ளார்.
கடந்த ஆண்டில் இதுபோன்ற விண்ணப்பங்கள் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு அதிகரித்திருந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
இந்நிலையில் 2024 முதல் 1,800 க்கும் மேற்பட்ட டிபிஆர்கே செயல்பாட்டாளர்கள் சேருவதை நாங்கள் நிறுத்தியுள்ளோம்.
மேலும் இந்த ஆண்டு காலாண்டில் 27 சதவீதம் அதிகமான டிபிஆர்கே விண்ணப்பங்கள் இனங்காணப்பட்டுள்ளன. அவற்றையும் நிறுத்தியுள்ளோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.





