வடகொரியா அணு ஆயுதங்களை கைவிடாது : கிம் ஜாங்-உன்னின் சகோதரி எச்சரிக்கை

ஏவுகணை சோதனைகளில் ஈடுபட்டு வரும் கொரிய நாடுகளில் வடகொரியா முன்னிலையில் உள்ளது. உலக நாடுகளின் எதிர்ப்பை மீறியும் வடகொரியா இந்த நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதால் அந்நாட்டுக்கு பல்வேறு நாடுகள் மற்றும் அமைப்புகளால் பொருளாதாரத் தடை விதிக்கப்பட்டு உள்ளது.
என்றாலும் அதிலிருந்து பின்வாங்காமல் தொடர்ந்து ஏவுகணை சோதனையில் ஈடுபட்டு வருகிறது. வடகொரியா இந்த அளவிற்கு ஏவுகணைச் சோதனைகளில் ஈடுபடுவதற்கு மிக முக்கியமான காரணமே, தென்கொரிய நாடானது அமெரிக்காவுடன் இணைந்து போர் பயிற்சிகளில் ஈடுபட்டு வருவதுதான். இதனால், தங்களது நாட்டிற்கு எதிராக ஆத்திரமூட்டும் செயல்களை அமெரிக்கா செய்துவருவதாக வடகொரியா குற்றம்சாட்டி வருகிறது.
கடந்த ஜனவரி மாதம் அமெரிக்க அதிபராக மீண்டும் பொறுப்பேற்ற டொனால்டு ட்ரம்ப், வட கொரியாவுடனான அமைதிப் பேச்சுவாா்த்தையை புதுப்பிக்க விரும்புவதாகக் கூறிவருகிறாா். இதற்கு வட கொரியா இதுவரை பதிலளிக்காத நிலையில், தாங்கள் அணு ஆயுதங்களை ஒருபோதும் கைவிடப்போவதில்லை என்று கிம் ஜாங் உன் என தெரிவித்து வருகிறார்.
இந்த நிலையில், வடகொரியாவை அணு ஆயுதங்களற்ற நாடாக்கவிருப்பதாக அமெரிக்காவும் அதன் ஆசிய கூட்டாளிகளும் கூறுவது அந்த நாடுகளின் பகல் கனவு என்று வடகொரிய அதிபா் கிம் ஜோங்-உன்னின் சகோதரி கிம் யோ ஜாங் தெரிவித்துள்ளார். அமெரிக்கா, தென்கொரியா, ஜப்பான் ஆகிய நாடுகள் கடந்த வாரம் நடத்திய மாநாட்டில் வட கொரியாவை அணு ஆயுதமற்ற நாடாக்க உறுதிபூண்டன.
இந்த நிலையில், இதுகுறித்து கருத்து தெரிவித்த வடகொரிய அதிபா் கிம் ஜோங்-உன்னின் சகோதரியும் வெளியுறவுக் கொள்கையில் முக்கிய பங்கு வகிப்பவருமான கிம் யோ ஜாங், “வடகொரியா தனது அணு ஆயுதங்களைக் கைவிடச் செய்ய வேண்டும் என்று நினைப்பது வெறும் பகல் கனவு. அணு ஆயுத பலம் பெற வேண்டும் என்பது நாட்டின் அரசியல் சாசனத்திலேயே வலியுறுத்தப்பட்டுள்ளது. எனவே, வடகொரியாவை அணு ஆயுதமற்ற நாடாக்குவது தொடா்பாக பிற நாடுகள் ஆலோசிப்பது நாட்டுக்கு எதிரான கடுமையான செயல் ஆகும். வடகொரியா தனது அணு ஆயுத பலத்தை மேலும் அதிகரித்துக்கொள்வதை இது நியாயப்படுத்துகிறது” எனத் தெரிவித்துள்ளார்