டெஸ்ட் கிரிக்கெட்டில் ரோஹித் ஓய்வை அறிவித்தாலும் ஆச்சரியம் இல்லை – ரவி சாஸ்திரி
டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ரோஹித் சர்மா ஓய்வு பெற்றாலும் அதில் ஆச்சரியப்படுவதற்கில்லை என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் டிராபி டெஸ்ட் தொடரில் மோசமான பார்ம் காரணமாக ரன் சேர்க்க முடியாமல் தடுமாறி வருகிறார் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா.
இந்த தொடரில் ஐந்து இன்னிங்ஸ்களில் விளையாடி உள்ள அவர், அதிகபட்சமாக ஒரு இன்னிங்ஸில் எடுத்த ரன்கள் வெறும் 10 மட்டுமே. தொடரின் முதல் போட்டியில் அவர் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தச் சூழலில் தான் தொடரின் கடைசி போட்டியான சிட்னி டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் ஆடும் லெவனில் ரோஹித் இடம்பிடிப்பது குறித்த எதுவும் சொல்லாமல் கடந்து சென்றார் இந்திய அணியின் பயிற்சியாளர் கம்பீர்.
இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, “தனது டெஸ்ட் கிரிக்கெட் எதிர்காலம் குறித்து ரோஹித் சர்மா முடிவு செய்வார். அவர் ஓய்வு பெறுவதாக அறிவித்தாலும் அதில் நான் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை. ஏனெனில், இளம் வீரர்களில் அணியில் இடம்பெற தயராக உள்ளனர். ஷுப்மன் கில் அணியில் உள்ளார். கடந்த ஆண்டு அவரது சராசரி 40. இருப்பினும் அவருக்கு ஆடும் லெவனில் வாய்ப்பு இல்லை. அவர் பெஞ்சில் உட்கார வைக்கப்பட்டு இருப்பது ஏமாற்றம். அதனால் தான் சொல்கிறேன் ரோஹித்தின் ஓய்வு முடிவு எனக்கு ஆச்சரியம் அளிக்காது என்று சொல்கிறேன்.
இந்த நேரத்தில் ரோஹித் சர்மா உடன் நான் இருந்தால் எதிரணியின் பந்துவீச்சை அடித்து துவம்சம் செய்யுமாறு சொல்வேன். அப்படி ஆடும் போது என்ன நடக்கிறது என்று பார்க்கலாம் என சொல்லி இருப்பேன். வெளியில் இருந்து அவரது ஆட்டத்தை பார்க்கும் போது பந்தை கொஞ்சம் லேட்டாக அணுகுகிறார் என தோன்றுகிறது. வழக்கம் போலவே அவரது கால்கள் நகரவில்லை. அவர் பார்மில் இருக்கும் போதும் கால்கள் நகராது. அவர் பந்தை நோக்கி தான் நகர்வார். அதை அவர் செய்தாலே ரன் குவிக்க தொடங்குவார். அவரது அதிரடி பாணி ஆட்டம் முக்கியம்.
இந்தியா இந்த தொடரில் சில போட்டிகளில் தோல்வியை தழுவி உள்ளது. இருந்தாலும் கடைசி டெஸ்ட் போட்டியில் வெல்வதன் மூலம் பார்டர் கவாஸ்கர் டிராபியை தக்க வைக்கும் வாய்ப்புள்ளது. ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு முன்னேறுவது எல்லாம் இதை பொறுத்தே அமையும்” என தெரிவித்துள்ளார்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் ரோஹித் சர்மா: 37 வயதான ரோஹித், கடந்த 2013 முதல் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடி வருகிறார். 67 டெஸ்ட் போட்டிகளில் 4,301 ரன்கள் எடுத்துள்ளார். 12 சதங்கள் மற்றும் 18 அரைசதங்களை பதிவு செய்துள்ளார்.