விசா மற்றும் வேலைவாய்ப்பில் புதிய மாற்றங்களை அறிமுகப்படுத்திய நியூசிலாந்து!
நியூசிலாந்து விசா மற்றும் வேலைவாய்ப்பு துறைகளில் புதிய மாற்றத்தை அறிவித்துள்ளது.
இதன்படி புலம்பெயர்ந்தோருக்கான குறைந்தபட்ச பணி அனுபவத்தை 3 ஆண்டுகளில் இருந்து இரண்டு ஆண்டுகளாகக் குறைத்துள்ளது.
திறமையான தொழிலாளர்களை நியூசிலாந்துக்குள் அழைத்து வர இது உதவும் என்றும் குறிப்பாக நியூசிலாந்தில் வேலை தேடும் இந்திய புலம்பெயர்ந்தோருக்கு இது உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதேபோல சீசனல் தொழிலாளர்கள் (ஆண்டில் குறிப்பிட்ட காலத்திற்கு மட்டும் வேலை செய்வார்கள்) நியூசிலாந்தில் தங்குவதற்கு இரண்டு புதிய பாதைகளையும் அந்நாடு அறிமுகப்படுத்தியுள்ளது.
அதன்படி அதிக அனுபவம் கொண்ட தொழிலாளர்கள் பல முறை நியூசிலாந்து வந்து செல்ல உதவும் 3 ஆண்டுகள் செல்லுபடியாகும் விசாவை பெறலாம். அதேபோல குறைந்த திறன் கொண்ட தொழிலாளர்களுக்கு ஏழு மாத ஒற்றை நுழைவு விசாவும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், AEWV மற்றும் SPWV விசா மூலம் வேலை செய்ய வருவோருக்குக் குறிப்பிட்ட ஊதியம் வழங்க வேண்டும் என்ற விதி இருந்தது. அந்த விதியை நியூசிலாந்து நீக்கியுள்ளது.
அதேபோல இதற்கு முன்பு வெளிநாட்டினரை வேலைக்கு எடுக்க நியூசிலாந்து நிறுவனங்கள் Work and Income’s 21-day mandated recruitment period என்பதைக் கடைப்பிடிக்க வேண்டும்.
அதாவது நியூசிலாந்தில் முதலில் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பை வெளியிட்டு, 21 நாட்களில் சரியான ஆள் கிடைக்கவில்லை என்றால் மட்டுமே வெளிநாட்டினரை வேலைக்கு எடுக்க வேண்டும். இந்த விதியை நியூசிலாந்து இப்போது நீக்கியுள்ளது. தேவைப்பட்ட நேரத்தில் உடனடியாக வெளிநாட்டினரை வேலைக்கு எடுக்கலாம்.
இந்த திட்டங்களை பெரும்பாலான ஆசிய நாட்டவர்கள் பயன்படுத்திக்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.