பிரித்தானியாவை குறிவைக்கும் ரஷ்ய சைபர் போர் – இணைய சேவைகள் முடங்கும் அபாயம்
ரஷ்ய சார்பு இணைய குற்றவாளிகளிடமிருந்து கடுமையான சைபர் தாக்குதல் அச்சுறுத்தல் காணப்படுவதாக உயர் பாதுகாப்பு அதிகாரிகள் பிரித்தானிய நிறுவனங்களுக்கு எச்சரித்துள்ளனர்.
பிரித்தானியாவின் உயர்நிலை நுண்ணறிவு மற்றும் பாதுகாப்பு அமைப்பான GCHQ இன் ஒரு பகுதியாக செயல்படும் தேசிய சைபர் பாதுகாப்பு மையம் (NCSC), ரஷ்யாவுடன் தொடர்புடைய “ஹேக்டிவிஸ்ட்” குழுக்கள், வலைத்தளங்களை செயலிழக்கச் செய்து, பொதுமக்கள் ஒன்லைன் சேவைகளை அணுகுவதைத் தடுக்க முயற்சிப்பதாக தெரிவித்துள்ளது.
சட்டபூர்வமாக அனுமதி இன்றி கணினி அமைப்புகளை அணுகி அல்லது சேவைகளை முடக்கி அரசியல் மற்றும் சமூக சர்ச்சைகளை வெளிக்காட்ட முயற்சிப்பவர்கள் “ஹேக்டிவிஸ்ட்” குழுக்கள் என அழைக்கப்படுவர்.
இந்த தாக்குதல்கள் பெரும்பாலும் சேவை மறுப்பு (DoS) தாக்குதல்களாக இருக்கும் என்றும், அவற்றுக்கு எதிராக தங்கள் சைபர் பாதுகாப்பு ஏற்பாடுகளை உடனடியாக மறுபரிசீலனை செய்து வலுப்படுத்துமாறு தேசிய சைபர் பாதுகாப்பு மையங்களை வலியுறுத்தியுள்ளது.
ரஷ்ய-இணைந்த ஹேக்டிவிஸ்ட் குழுக்கள் தொடர்ந்து பிரித்தானிய நிறுவனங்களை குறிவைக்கின்றன. தொழில்நுட்ப ரீதியாக எளிமையானவை என்றாலும்,
DoS தாக்குதல்களின் தாக்கம் மிகுந்ததாக இருக்கலாம்,” என தேசிய மீள்தன்மைக்கான NCSC பணிப்பாளர் ஜோனாதன் எலிசன் தெரிவித்தார்.
“முக்கிய வலைத்தளங்கள் மற்றும் ஒன்லைன் அமைப்புகளை முடக்குவதன் மூலம், மக்கள் அன்றாடம் சார்ந்திருக்கும் அத்தியாவசிய சேவைகளை அணுக முடியாத நிலை ஏற்படலாம்,” என்றும் அவர் எச்சரித்தார்.
இந்த ஹேக்கர்கள் நிதி ஆதாயத்திற்காக அல்ல, கருத்தியல் உந்துதலின் அடிப்படையிலேயே செயல்படுகிறார்கள் என்றும் NCSC எச்சரிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.





