சீனா, கனடா, மெக்சிகோவின் பொருள்களுக்குப் புதிய வரிவதிப்பு; டொனால்ட் டிரம்ப் மிரட்டல்
அமெரிக்காவின் மூன்று ஆகப் பெரிய வர்த்தகப் பங்காளிகளான கனடா, மெக்சிகோ, சீனா ஆகிய நாடுகளின் பொருள்களுக்குப் புதிய, பேரளவிலான வரி விதிக்கப்போவதாக அமெரிக்காவின் அடுத்த அதிபராகப் பொறுப்பேற்க இருக்கும் டொனால்ட் டிரம்ப் நவம்பர் 25ஆம் திகதியன்று தெரிவித்தார்.
அமெரிக்காவுக்குள் போதைப்பொருள், சட்டவிரோத குடியேறிகள் நுழைவதை கனடாவும் மெக்சிகோவும் தடுக்கும்வரை அந்த நாடுகளிலிருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருள்களுக்கு 25 சதவீதம் வரி விதிக்கப்படும் என்று டிரம்ப் கூறினார்.
மெக்சிகோ ஏற்றுமதி செய்யும் பொருள்களில் 83 சதவீத்த்திற்கும் அதிகமான பொருள்கள் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.கனடா ஏற்றுமதி செய்யும் பொருள்களில் 75 சதவீதமான பொருள்கள் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
டிரம்ப் எடுக்கவிருக்கும் நடவடிக்கை தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை மீறுவதாகக் கூறப்படுகிறது.சீனாவிலிருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருள்களுக்கு கூடுதல் வரியுடன் மேலும் 10 சதவீதம் வரி விதிக்கப்படும் என்றார் டிரம்ப்.
இந்நடவடிக்கைகள் மூலம் தேர்தல் பிரசாரத்தின்போது அமெரிக்கர்களுக்கு தந்த வாக்குறுதிகளை நிறைவேற்றப்போவதாக டிரம்ப் தெரிவித்தார்.அமெரிக்காவுக்கும் அமெரிக்கர்களுக்கும் முன்னுரிமை வழங்கப்படும் என்று அவர் வலியுறுத்தினார்.
ஜனவரி 20ஆம் திகதியன்று புதிய வரி விதிப்பு தொடர்பான உத்தரவு ஆவணத்தில் கையெழுத்திடப்போவதாக டிரம்ப் தெரிவித்தார்.புதிய வரிவிதிப்பு குறித்து அறிவித்ததை அடுத்து, கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுடன் டிரம்ப் பேசினார்.
இருவரும் வர்த்தகம், எல்லைப் பாதுகாப்பு ஆகியவை குறித்து கலந்துரையாடியதாக அறியப்படுகிறது.இதற்கிடையே, வர்த்தகப் போரில் யாருக்கும் வெற்றி கிட்டாது என்று வாஷிங்டனில் உள்ள சீனத் தூதரகம் தெரிவித்துள்ளது.
“சீனா-அமெரிக்கப் பொருளியல் மற்றும் வர்த்தக ஒத்துழைப்பு இருநாடுகளுக்கும் பலன் தரக்கூடியது,” என்று சீனத் தூதரகம் அறிக்கை வெளியிட்டது.