டிஜிட்டல் நிதிச் செயல்முறைக்கு புதிய கட்டுப்பாடுகள்! சிங்கப்பூரில் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை
டிஜிட்டல் நிதி நம்பகத்தன்மைக்கு புதிய விதிமுறைகள் அவசியம் எனத் துறைசார் வல்லுநர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
சிங்கப்பூரில் நடைபெற்ற நிதித் தொழில்நுட்ப நிகழ்வின் இறுதி நாளில், இது தொடர்பான கோரிக்கையை நிதித் தொழில்நுட்பத் தலைவர்கள் விடுத்துள்ளனர்.
எதிர்கால டிஜிட்டல் நிதிச் செயல்முறை மீது மக்களின் நம்பிக்கையை நிலைநாட்டுவதற்குப் புதிய விதிமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகள் தேவை என அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
தொழில்நுட்பம், பணப்புழக்கத்தில் விரைவான மாற்றங்களை ஏற்படுத்துவதால், இந்த விதிமுறைகள் துரிதமாகச் செயல்படுத்தப்பட வேண்டியது அவசியம் என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இதேவேளை, அபாயங்களை நிர்வகிக்கும் செயல்முறைகள், சிறந்த கட்டுப்பாடுகள், மேற்பார்வை போன்றவற்றால் மட்டுமே பொதுமக்களின் நம்பிக்கை ஏற்படுவதாக, சிங்கப்பூர் நாணய ஆணையத்தின் (MAS) இயக்குநர் குழுத் தலைவர் ரவி மேனன் தெரிவித்துள்ளார்.
அந்த நம்பிக்கையை வைத்தே நிதி கட்டமைப்பின் நீடித்த நிலைத்தன்மை நிர்ணயிக்கப்படுகிறது.
மேலும், இந்த அபாயங்களை நிர்வகிக்கும் செயல்முறைகள் மற்றும் கட்டுப்பாடுகள் மாற வேண்டும். அவை புதிய நிதித் தொழில்நுட்ப வளர்ச்சியைச் சார்ந்து இருக்க வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
டிஜிட்டல் துறைசார்ந்த நிதிச் சந்தையில் மக்களின் நம்பிக்கையைப் பெற, அதிலுள்ள சவால்களைச் சமாளிக்க துரிதமான நிர்வாகமும் ஒத்துழைப்பும் தேவை என்றும் தலைவர் ரவி மேனன் தெரிவித்துள்ளார்.





