சிங்கப்பூரில் பணியாற்றும் வெளிநாட்டவர்களின் வேலைக்கு புதிய சிக்கல்
சிங்கப்பூரில் பணியாற்றும் வெளிநாட்டவர்களின் வேலைக்கு புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வெளிநாட்டு ஊழியர்களின் படுக்கை இடங்களில் தற்போது பற்றாக்குறை நிலவுவதாக கூறப்பட்டுள்ளது.
இதன் காரணமாக அடுத்த இரண்டு ஆண்டுகளில் வெளிநாட்டு ஊழியர்களின் எண்ணிக்கையில் தாக்கம் ஏற்படலாம் என கூறப்படுகின்றது.
சிங்கப்பூரில் 2022ஆம் ஆண்டு டிசம்பர் முதல் வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதிகளில் சுமார் 17,000 புதிய படுக்கைகள் சேர்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இருப்பினும், 2022 தொடக்கம் முதல் பொருளாதாரம் மீண்டு வரும் நிலையில் புதிய ஊழியர்கள் அதிகமானோர் சிங்கப்பூருக்கு வருகை தந்த காரணத்தால் படுக்கைகள் தேவை அதிகரித்தது, இதனால் பற்றாக்குறை ஏற்பட்டதாக மனிதவள அமைச்சகம் தெரிவித்துள்ளது.
உற்பத்தித்திறனை அதிகரித்து கொள்ளவும், வெளிநாட்டு ஊழியர்களை நம்பியிருக்கும் போக்கை குறைக்குமாறும் முதலாளிகளுக்கு முன்னர் அமைச்சகம் வலியுறுத்தியது.
முதலாளிகள், ஊழியர்களுக்கான சொந்தமான குடியிருப்புகளை கட்டுவது குறித்து பரிசீலிக்கவும் வலியுறுத்தியது. வெளிநாட்டு ஊழியர்கள் சிங்கப்பூருக்கு வருவதற்கு முன்பே அவர்களுக்கான தங்கும் வசதியை முதலாளிகள் ஏற்படுத்த வேண்டும்.
மேலும் அதிக திட்டங்களை மேற்கொள்வதற்கு முன் ஊழியர்களின் எண்ணிக்கையையும் முதலாளிகள் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
சிங்கப்பூர் கோவிட்-19 பாதிப்பில் இருந்து மீண்டதை அடுத்து, அதிக வெளிநாட்டு ஊழியர்களை முதலாளிகள் வேலைக்கு அமர்த்துவதால் தங்கும்விடுதி படுக்கைகளுக்கான தேவை அதிகரித்து இருக்கிறது என்று மனிதவள அமைச்சர் டான் சீ லெங் நாடாளுமன்றத்தில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்தார்.
2023 மே மாத நிலவரப்படி, சிங்கப்பூரில் கட்டுமானம், கடல் மற்றும் செயல்முறைத் துறைகளில் சுமார் 434,000 வெளிநாட்டு ஊழியர்கள் work permit அனுமதியுடன் வேலைபார்ப்பதாக கூறப்பட்டுள்ளது.
அதாவது, கடந்த 18 மாதங்களில் இந்தத் துறைகளில் மட்டும் சுமார் 112,000 புதிய வெளிநாட்டு ஊழியர்கள் வேலைகளில் அமர்த்தப்பட்டுள்ளனர்.
அதிகரித்து வரும் செலவுகளுடன், தேவை அதிகரிப்பு காரணமாக தங்குமிட படுக்கைகளுக்கான சராசரி மாத வாடகை அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.