WhatsAppஇல் விரைவில் அறிமுகமாகும் புதிய வசதி
விரைவில் வாட்ஸ்அப் பயனர்கள் ஃபார்வேர்ட் மெசேஜ்களை கஸ்டமைஸ் செய்யும் அம்சம் அறிமுகமாக உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. அது குறித்து பார்ப்போம்.
வாட்ஸ்அப் மெசஞ்சரை உலக அளவில் சுமார் 200 கோடிக்கும் மேற்பட்ட பயனர்கள் பயன்படுத்தி வருகின்றனர். டெக்ஸ்ட் மெசேஜ், போட்டோ, வீடியோ, ஆடியோ மற்றும் அழைப்புகளை மேற்கொள்ள பயன்படுத்தப்பட்டு வருகிறது இந்தத் தளம். பள்ளிக்கூடம் தொடங்கி அலுவலகம் வரையில் இப்போது குழுக்களாக ஒருவருக்கு ஒருவர், ஒருவருக்கு பலர் என இதன் மூலம் தகவல்களை பரிமாறிக் கொண்டு வருகின்றனர்.
தங்களது பயனர்களுக்கு தனித்துவமான பயன்பாட்டு திருப்தியை வழங்கும் விதமாக அவ்வப்போது புதிய அப்டேட்களையும், அம்சங்களையும் மெட்டா நிறுவனத்தின் வாட்ஸ்அப் அறிமுகம் செய்வது வழக்கம். இந்நிலையில், ஃபார்வேர்ட் மெசேஜ்களை கஸ்டமைஸ் செய்யும் அம்சம் அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
வாட்ஸ்அப் குறித்த அப்டேட்டை வழங்கி வரும் WA பீட்டா இன்ஃபோ பகிர்ந்துள்ளது. இப்போதைக்கு இந்த அம்சம் பீட்டா வெர்ஷனில் இருப்பதாக தெரிவித்துள்ளது. இதன் மூலம் பயனர்கள் தங்களுக்கு வந்த டெக்ஸ்ட் மெசேஜ், டாக்குமெண்ட்ஸ், வீடியோ மற்றும் இமேஜ்களை பிற பயனர்களுக்கு ஃபார்வேர்ட் செய்யும் போது அதில் கூடுதலாக சில விவரங்களை சேர்த்து அனுப்ப முடியும்.
வழக்கமாக மெசேஜ்களை ஃபார்வேர்ட் செய்யும்போது அதில் கூடுதல் தகவல் சேர்க்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த அம்சம் விரைவில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.