அழகாலக இருப்பதால் ‘கத்தி’ பட வில்லனுக்கு நியூயார்க் ஏர்போர்ட்டில் நேர்ந்த நிலை…
‘கத்தி’ படத்தில் வில்லனாக நடித்த நீல் நிதின் முகேஷை நியூயார்க் காவல்துறையினர் சிறைபிடித்தனர். இந்தியர் என்பதை சொல்லியும் கேட்காமல் அவரை 4 மணி நேரம் தடுப்புக் காவலில் வைத்ததாக நீல் நிதின் வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.
பாலிவுட்டில் பல்வேறு படங்களில் நடித்து புகழ் பெற்றவர் நீல் நிதின் முகேஷ். இவரது தாத்தா முகேஷ் பிரபலமான பாடகர். அப்பா நிதினும் சிறந்த பாடகராக வலம் வந்தவர். இந்த சூழலில் நிதின் நடிகராக பரவலாக அறியப்படுகிறார்.
கடந்த 2014-ம் ஆண்டு வெளியான விஜயின் ‘கத்தி’ படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு பரிட்சயமானார்.
இந்நிலையில் நியூயார்க்கில் தனக்கு நடந்த சம்பவம் குறித்து அண்மையில் அவர் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறும்போது, “நான் ‘நியூயார்க்’ படத்தில் நடித்துக் கொண்டிருந்த சமயம் அது.
அப்போது நியூயார்க் ஏர்போர்ட்டில் தடுப்புக் காவலில் காவல்துறையால் வைக்கப்பட்டேன். என்னைப் பார்த்தால் இந்தியன் போல இல்லை என்று கூறி அவர்கள் சிறைபிடித்தனர். என்னை இந்தியன் என்றே அவர்கள் நம்பவில்லை.
என்னிடம் இந்திய பாஸ்போர்ட் இருப்பதாக கூறியும் அவர்கள் ஏற்கவில்லை. என்னைப் பற்றி பேசவே அவர்கள் விடவில்லை. நான் பேச அனுமதிக்காமல் அவர்கள் கேள்வி கேட்டுக் கொண்டே இருந்தார்கள்.
கிட்டத்தட்ட 4 மணி நேரமாக சிறைபிடிக்கப்பட்டேன். 4 மணி நேரத்துக்குப் பின் அவர்கள் என்னிடம், ‘என்ன சொல்ல போகிறாய்?’ எனக் கேட்டனர். அதற்கு நான் ‘என்னைப் பற்றி கூகுளில் தேடிப் பாருங்கள்’ என்றேன். அதன் பிறகே விடுவிக்கப்பட்டேன்” என்றார்.