நிலவுக்குச் செல்லும் உங்கள் பெயர் ; நாசா வழங்கும் ஒரு அரிய வாய்ப்பு
நாசாவின் வரலாற்றுச் சிறப்புமிக்க ஆர்டெமிஸ் II (Artemis II) விண்வெளி பயணத்தின் ஒரு பகுதியாக, உலகம் முழுவதும் உள்ள பொதுமக்கள் தங்களின் பெயர்களை விண்வெளிக்கு அனுப்பும் அரிய வாய்ப்பு தற்போது வழங்கப்பட்டுள்ளது.
“ஆர்ட்டெமிஸ் II உடன் உங்கள் பெயரை அனுப்பவும்.(Send Your Name with Artemis II) ” எனப்படும் இந்த சிறப்பு திட்டத்தின் கீழ் பதிவு செய்யும் நபர்களின் பெயர்கள், நிலாவைச் சுற்றி பயணம் செய்ய உள்ள ஓரியன் (Orion) விண்கலத்தில் இடம்பெறவுள்ளன.
ஆர்டெமிஸ் II திட்டம், மனிதர்களை மீண்டும் நிலாவுக்கு அழைத்துச் செல்லும் நாசாவின் முயற்சியில், முதல் மனிதர்கள் பங்கேற்கும் விண்வெளி பயணமாக கருதப்படுகிறது.
இதனால் இந்தப் பயணம் உலகளவில் பெரும் கவனத்தை பெற்றுள்ளது.
இதற்கான அனைத்து தயாரிப்புகளும் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், தேர்ந்தெடுக்கப்பட்ட விண்வெளி வீரர்கள் மற்றும் பொதுமக்களின் பெயர்கள் அடங்கிய தரவுக் கோப்புடன் கூடிய ஓரியன் விண்கலம், வரும் ஏப்ரல் (April 2026) மாதத்தில் விண்ணில் செலுத்தப்படவுள்ளது.
மொத்தம் 10 நாட்கள் நீடிக்கும் இந்தப் பயணத்தின் போது, ஆழ்விண்வெளி ஆய்வுகளுக்குத் தேவையான நவீன தொழில்நுட்ப அமைப்புகள் சோதனை செய்யப்பட உள்ளன.
இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க நிகழ்வில் பங்கேற்க விரும்புவோர், நாசாவின் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் தங்களின் பெயரை பதிவு செய்யலாம்.
பதிவு செய்தவர்களுக்கு, ஒரு மெய்நிகர் பயண அனுமதி சீட்டு (Virtual Boarding Pass) வழங்கப்படுவதும் குறிப்பிடத்தக்கது.





