ஆஸ்திரேலியாவில் மக்களை அச்சத்தில் ஆழ்த்திய மர்ம சத்தம் – பல வீடுகள் குலுங்கியதால் மக்கள் அச்சம்
ஆஸ்திரேலியாவிலுள்ள முக்கிய நீரேந்துப் பகுதிகளில், மர்மமான மற்றும் பயங்கரமான வெடிப்புச் சத்தம் காரணமாக அந்தப் பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
மெல்பேர்னில் உள்ள விக்டோரியாவின் கிழக்கு கிப்ஸ்லாந்தில் உள்ள பெய்ன்ஸ்டேல் மற்றும் ஏரிப் பகுதிகளில் இந்த சத்தம் கேட்டதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.
பாரிய சத்தம் கேட்ட போது தமது வீடுகள் குலுங்கியதாகப் பலர் அச்சத்துடன் தெரிவித்துள்ளனர்.
இந்த அதிர்வுகள் பூகம்பத்தினால் ஏற்பட்டவை அல்லவென்றும், வானத்தில் இருந்து மர்மப் பொருள் ஒன்று வீழ்ந்ததாக மவுண்ட் டெய்லரைச் சேர்ந்த கெயில் என்பவர் தெரிவித்துள்ளார்.
சத்தம் மேலிருந்து வந்த ஒரு அழுத்தம் போல உணர்ந்ததாகவும், சில வீடுகளின் கூரைகள் கூட அதிர்ந்ததாகவும் அந்தப் பகுதியில் வசிக்கும் ரான் ஓவர்லீஸ் என்பவர் தெரிவித்துள்ளார்.
இந்த மர்மச் செயற்பாடு குறித்து இதுவரை சரியான தகவல்கள் கண்டுபிடிக்கப்படவில்லை.
எனினும், இது விண்கல் (meteorite) அல்லது விண்வெளி வெடிப்பாக இருக்கலாம் என்று நிபுணர்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். சிலர் இது ஒரு வெளிநாட்டு விமானத்தின் விபத்தாக இருக்கலாம் என்றும் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் விரிவான விசாரணைகளை துறைசார் நிபுணர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.
அதிகப்படியான சத்தம் மற்றும் அழுத்தம் காரணமாக குடியிருப்பாளர்களுக்கு எந்த உடல்ரீதியான பாதிப்பும் ஏற்படவில்லை என்று காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது.





