முடங்கிப்போன மனிதனின் வாழ்க்கையை புத்துயிர் பெற வைத்த மஸ்க்கின் நியூராலிங்க் சிப்

உலக கோடீஸ்வரன் எலன் மஸ்க்கின் நியூராலிங்க் சிப் பொருத்தி கொண்ட முதல் நபர் புத்துயிர் பெற்று வருவதாக குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 8 வருடங்களாக பக்கவாத நோய்யால் முடங்கிப் போயிருந்த நோலண்ட் அர்பாக் என்பவரே இதனை பொருத்திக் கொண்டுள்ளார். தனது வாழ்க்கை தற்போது நியூராலிங் சிப் மூலம் புத்துயிர் பெற்றுள்ளதென அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் அமெரிக்காவின் அரிசோனா யூமாவைச் சேர்ந்த நோலண்ட் அர்பாக், டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க்கின், நியூராலிங்க் சிப்பை மூளையில் பொருத்திக்கொண்ட முதல் மனிதர் என்ற பெருமையை பெற்றவர்.
கடந்த 2016ஆம் ஆண்டு பொறியாளர்கள் குழுவுடன் இணைந்து நியூராலிங்க் என்ற நிறுவனத்தை எலான் மஸ்க் தொடங்கினார்.
இந்த நியூராலிங்க் சிப், பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பொருத்துவதன் மூலம், அவர்களால் எழுந்து நடக்க முடியும் எனவும், மூளையிலிருந்து வரும் சமிஞ்சைகளை பயன்படுத்தி அவர்களால் கம்ப்யூட்டரையும் பயன்படுத்த முடியும் எனவும் அந்நிறுவனம் தெரிவித்தது.
அதைத்தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், கடந்த ஆண்டு நியூராலிங்க் நிறுவனம் முதல்முறையாக சோதனை அடிப்படையில் மனிதருக்கு மூளையில் நியூராலிங்க் சிப் பொருத்த முடிவு செய்திருந்தது.
நியூராலிங்கின் முதல் மனித சோதனைக்கு, பக்கவாத நோயால் பாதிக்கப்பட்ட 30 வயதான நோலண்ட் அர்பாக் விண்ணப்பித்து, கடந்த ஆண்டு நாணய அளவிலான N1 சிப்பை அவரது மூளையில் பொருத்த அறுவை சிகிச்சை செய்து கொண்டார்.
1,024 மின்முனைகள் பொருத்தப்பட்ட இந்த சிப், மூளையில் இருந்து வரும் மின் சமிக்ஞைகளைப் படித்து, அந்த எண்ணங்களை அப்படியே கணினி கட்டளைகளாக மொழிபெயர்க்கும் என கூறப்படுகிறது.
அர்பாக் தனது 22 வது வயதில் நீச்சல் விபத்தின் போது அவருக்கு பக்கவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் தனது அன்றாடப் பணிகளுக்கு மற்றவர்களைச் சார்ந்தே இருந்துள்ளார்.
இந்த நிலையில் அர்பாக் மூளையில், நியூராலிங்க் சிப் பொருத்தப்பட்டபோது, ஆரம்பத்தில் கர்சரைக் கட்டுப்படுத்த அவர் சிரமப்பட்டாலும், இரண்டு வாரங்களுக்குள், அவர் தனது கையின் அசைவுகளைக் கற்பனை செய்து, தனது எண்ணங்களால் அதனை இயக்கியதாக தெரிவித்துள்ளார்.