ஆஸ்திரேலியாவின் முக்கிய ஓய்வூதிய நிதிகளில் 20,000க்கும் மேற்பட்ட கணக்குகள் ஊடுருவல்

ஆஸ்ரேலியாவின் ஆகப் பெரிய ஓய்வூதிய நிதிகளில் உள்ள கணக்குகள் திட்டமிட்டு ஒன்றாக ஊடுருவப்பட்டுள்ளன; அவற்றின் உறுப்பினர்கள் சிலரின் சேமிப்பு திருடப்பட்டுள்ளது.தகவல் தெரிந்த ஒருவர் இதனைத் தெரிவித்தார். 20,000க்கும் அதிகமான கணக்குகள் ஊடுருவப்பட்டுள்ளன.
4.2 டிரில்லியன் ஆஸ்திரேலிய டொலர் (S$3.5 டிரில்லியன்) மதிப்பிலான ஆஸ்திரேலியாவின் ஓய்வுகாலச் சேமிப்புத் துறையின் கணக்குகளை இணைய ஊடுருவிகள் குறிவைத்தது பற்றித் தமக்குத் தெரியும் என்று அந்நாட்டின் தேசிய இணையப் பாதுகாப்பு ஒருங்கிணைப்பாளர் மிஷெல் மெக்கின்னஸ் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார். அத்துறையினர், அரசாங்க அதிகாரிகள், சம்பந்தப்பட்ட ஒழுங்கு அதிகாரிகள் ஆகியோருக்கிடையே பதில் நடவடிக்கை எடுப்பதற்கான திட்டங்கள் வரையப்பட்டு வருவதாக அவர் சொன்னார்.
எத்தனை ஓய்வூதியக் கணக்குகள் பாதிக்கப்பட்டன, எத்தனை உறுப்பினர்கள் பாதிப்புக்கு ஆளாயினர் ஆகிய விவரங்கள் தெரியவில்லை.
ஆஸ்திரேலியாவின் ஆகப் பெரிய நிதி நிர்வாக நிறுவனமான AustralianSuper, மோசடிச் செயல்களை மேற்கொள்ளும் நோக்கில் தங்கள் உறுப்பினர்கள் கிட்டத்தட்ட 600 பேரின் கடவுச்சொற்கள் திருடப்பட்டதாகத் தெரிவித்தது. ஆஸ்திரேலியாவின் இரண்டாவது ஆகப் பெரிய நிதி நிர்வாக நிறுவனமான ஆஸ்திரேலிய ஓய்வுக்கால அறக்கட்டளை , தங்களின் நூற்றுக்கணக்கான கணக்குகளைப் பாதிக்கும் வகையில் இயல்புக்கு மாறான இணைய நடவடிக்கைகள் இடம்பெற்றதை அறிந்ததாகத் தெரிவித்தது.
‘ரெஸ்ட்சூப்பர்’, ‘இன்சைனிய ஃபைனான்ஷியல்’, ‘ஹோஸ்ட்பிளஸ்’ ஆகிய நிறுவனங்களும் ஊடுருவலால் பாதிக்கப்பட்டன. ஊடுருவல் குறித்துத் தமக்கு விளக்கமளிக்கப்பட்டுள்ளதாகவும் அரசாங்க அமைப்புகள் தகுந்த பதில் நடவடிக்கை எடுக்கும் என்றும் ஆஸ்திரேலியப் பிரதமர் ஆண்டனி அல்பனிஸ் தெரிவித்தார்.