நேபாளத்தில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!
நேப்பாளத்தில் தொடர்ந்து பெய்யும் கனமழையால் வெள்ளமும் நிலச்சரிவும் ஏற்பட்டு செப்டம்பர் 27ஆம் திகதி முதல் குறைந்தது 101 பேர் உயிரிழந்துவிட்டனர்.இதனால், நாட்டின் பிரதான சாலைகள் மூடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் செப்டம்பர் 28ஆம் திகதி தெரிவித்தனர்.
இதற்கிடையே, மரண எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்றும் கூறப்படுகிறது. மேலும், 64 பேரைக் காணவில்லை என்றும் பலர் காயமுற்ற நிலையில் உள்ளனர் என்றும் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் உள்துறை அமைச்சு அதிகாரி தில் குமார் தாமாங் கூறினார்.
கத்மாண்டு பள்ளத்தாக்கில் பெரும்பாலான உயிரிழப்புகள் நேர்ந்ததாகக் கூறப்படுகிறது. நாட்டின் தலைநகர் அமைந்துள்ள இப்பகுதி, நான்கு மில்லியன் மக்களது வசிப்பிடம். வெள்ளத்தால் அங்குள்ள போக்குவரத்துடன் அன்றாட நடவடிக்கைகள் அனைத்தும் நிலைகுத்தி நின்றன.
இந்நிலையில், உயிரிழந்தோரில் மாக்வான்பூர் மாவட்டத்தில் உள்ள நேப்பாளக் காற்பந்துச் சங்கப் பயிற்சிக்கழகத்தைச் சேர்ந்த ஆறு விளையாட்டாளர்களும் இறந்துவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.விளையாட்டாளர்கள் பாதுகாப்பான இடத்துக்குச் சென்றுகொண்டிருந்தபோது இந்திரசரோவார் என்ற பகுதியில் சம்பவம் நிகழ்ந்ததாக அறியப்படுகிறது.அறுவரும் காணாமல் போனதை அடுத்து தேடுதல் பணிகள் தொடங்கின. அதையடுத்து, ஆறு விளையாட்டாளர்களின் சடலங்களையும் மீட்புப் பணியாளர்கள் கண்டுபிடித்தனர்.
ஹெலிகாப்டர்கள், ரப்பர் படகுகளின் உதவியுடன் மற்றொரு பகுதியில் மீட்புப் படையினர் தங்களது பணியில் இறங்கினர். வீட்டுக்கூரை மீதும் மேடான பகுதி மீதும் சிக்கிக்கொண்டோரை அவர்கள் மீட்க உதவினர்.ஆறுகள் பலவற்றில் நீர் அதிகம் பெருக்கெடுத்துச் சென்று சாலைகளிலும் பாலங்களிலும் ஊடுருவியுள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.
நிலச்சரிவு சம்பவங்களால் 28 இடங்களில் நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து நிலைகுத்தி போனதாகத் தெரிவித்த காவல்துறைப் பேச்சாளர், குப்பைகளை அகற்றி மீண்டும் சாலைகளைத் திறந்துவிட அதிகாரிகள் பாடுபடுவதாகக் குறிப்பிட்டார்.அனைத்துலக விமானப் பயணங்கள் வழக்கம்போல் இயங்கிவந்தபோதும் உள்நாட்டு விமானப் பயணங்கள் அனைத்தும் செப்டம்பர் 27ஆம் தேதி மாலை நிறுத்தப்பட்டு, பின்னர் படிப்படியாகத் தற்போது துவங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதற்கிடையே, மூன்று நாள்களுக்குப் பள்ளிகள் மூடப்படும் என்று நேப்பாளம் அறிவித்துள்ளது.
மழையினால் பல்கலைக்கழக, பள்ளிக் கட்டடங்கள் சேதமடைந்திருக்கும் நிலையில் மாணவர்களும் பெற்றோர்களும் சிரமத்தை எதிர்நோக்குவதாகவும் கட்டடங்களைச் சீர்செய்ய வேண்டியுள்ளதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.