விமான நிலையத்தில் 03 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியான கையடக்கத் தொலைபேசிகள் பறிமுதல்
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் 03 கோடியே 40 இலட்சம் ரூபாய் பெறுமதியான கையடக்கத் தொலைபேசிகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் சுங்க அதிகாரிகளால் இன்று (18) கைது செய்யப்பட்டுள்ளார்.
டுபாயிலிருந்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான UL-226 என்ற விமானம் மூலம் சந்தேகநபர் நாட்டை வந்தடைந்துள்ளார்.
விமான நிலையத்தின் Green Channel ஊடாக வெளியேற முயன்றபோது, சுங்க அதிகாரிகளுக்கு ஏற்பட்ட சந்தேகத்தின் பேரில் அவர் சோதனையிடப்பட்டார்.
இதன்போது, சந்தேகநபரின் மூன்று பயணப் பொதிகளுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 397 கைப்பேசிகள் சுங்க அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டன.
இந்தக் கைபேசித் தொகுதி இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் (TRCSL) எவ்விதமான அனுமதியுமின்றி சட்டவிரோதமாகக் கொண்டுவரப்பட்டுள்ளமை முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்டவர் கொழும்பு, தெமட்டகொட பிரதேசத்தைச் சேர்ந்த 45 வயதுடைய வர்த்தகர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இவர் தற்போது சுங்கக் காவலில் வைக்கப்பட்டுள்ளதுடன், அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.





