பங்களாதேஷில் கும்பல் ஆட்சி நீடிக்கக் கூடாது – சசி தரூர் கண்டனம்
பங்களாதேஷில் தற்போது இருப்பது போன்ற கும்பல் ஆட்சி நீடிக்கக் கூடாது என காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர் தெரிவித்துள்ளார்.
பாட்னா விமான நிலையத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர்,
‘‘இந்தியா, பங்களாதேஷுடன் நல்லுறவை விரும்புகிறது என்பதையும், அங்கு அமைதி பேணப்பட வேண்டும் என்பதையும் நாடாளுமன்ற நிலைக்குழுவும் கூறியுள்ளது.
பங்களாதேஷில் பெப்ரவரி மாதம் தேர்தல் நடைபெற உள்ளது. அங்கு ஜனநாயகம் திரும்ப வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். ஆனால், அங்குள்ள நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதுபோன்ற நிலை இரு நாடுகளுக்கும் நல்லதல்ல. அங்கு அமைதி நிலவ வேண்டும்’’ என தெரிவித்துள்ளார்.
இதேவேளை,பங்களாதேஷில் இந்து இளைஞர் அடித்துக் கொலை செய்யப்பட்டதற்கும் சசி தரூர் கடும் கண்டனம் வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில்,
‘‘பங்களாதேஷ் முழுவதும் வன்முறை கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ளது. கொடூர குற்றவாளிகளின் கைகளால் ஏழை இந்து இளைஞர் உயிரிழந்ததற்கு நான் துக்கப்படுகிறேன். அதேவேளை, இந்த விடயத்தில் பங்களாதேஷ் அரசு விடுத்துள்ள கண்டனத்தைப் பாராட்டுகிறேன்.
கொலையாளிகளைத் தண்டிக்க அவர்கள் என்ன செய்கிறார்கள், இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் தடுக்க என்ன நடவடிக்கைகள் எடுக்கிறார்கள் என்று நான் அவர்களிடம் கேட்க விரும்புகிறேன்’’ என அவர் தெரிவித்துள்ளார்.





