கச்சதீவு விவகாரத்தில் பா.ஜனதா இரட்டை வேடம் போடுகின்றது: மு.க.ஸ்டாலின்
இந்திய மக்களவை தேர்தல் களத்தில் தற்போது பிரதான பேசுபொருளாக மாறியுள்ளது கச்சதீவு விவகாரம்.
இந்நிலையில் கச்சதீவு விவகாரத்தில் பாரதிய ஜனதா கட்சி இரட்டை வேடம் போடுவதாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றம் சுமத்தியுள்ளார்.
திட்டமிட்டே தேர்தல் காலத்தில் வதந்திகளை பரப்பி, தமிழ்நாட்டில் அரசியல் இலாபம் பெற பாரதிய ஜனதா கட்சியினர் முயற்சிக்கின்றனர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 2022ஆம் ஆண்டு நேரு விளையாட்டரங்கில் நடைபெற்ற விழா ஒன்றின் போது, பிரதமர் மோடி முன்னிலையில், கச்சதீவை மீட்டுத்தர வேண்டும் என முதலமைச்சர் என்ற வகையில் தான் கோரிக்கை விடுத்ததாகவும், 10 ஆண்டு கால பாரதிய ஜனதா ஆட்சியில் அவர்கள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
கச்சத்தீவு விவகாரம் குறித்து மறைமுகமாகக் குறிப்பிட்டு, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தைப் பயன்படுத்தி வதந்திகளைப் பரப்ப முயற்சிப்பதாக பிரதமர் நரேந்திர மோடி மீது குற்றம்சாட்டியுள்ளார்.
உத்தரப்பிரதேசத்தில் கச்சத்தீவு விவகாரத்தில் மோடி பேசுவது அவர் குழப்பத்தில் இருப்பதையே காட்டுகிறது என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மேலும், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் , மாநில அரசுக்கு மத்திய அரசு வெளியிட்ட 5000 கோடி ரூபாய்க்கான கணக்குகளை கேட்டபோது, “கடன் கொடுப்பவரின் மொழியைப் பேசுகிறார்” என்றும் அவர் கடுமையாக சாடினார் .