காணாமல் போன விளையாட்டு வீரர் மர்ம மரணம்; கடற்கரையில் மீட்கப்பட்ட சடலம்…!
தேசிய வாலிபால் விளையாட்டு வீரர் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி மாநிலம் காரைக்கால் நேரு நகர் பகுதியைச் சேர்ந்தவர் பிலோமின் ராஜ் (33). வாலிபால் வீரரான இவர், தேசிய அளவிலான போட்டிகளில் கலந்துகொண்டு விளையாடி வந்தார். மேலும், இணையச் சேவை வழங்கும் பைபர் கேபிள் இணைக்கும் பணியிலும் ஈடுபட்டு வந்தார். இவருக்குக் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் கனிமொழி என்ற பெண்ணுடன் திருமணமாகி, 8 வயதில் ஒரு மகனும், 3 வயதில் ஒரு மகளும் உள்ளனர். பிலோமின் ராஜ் கடந்த 1ம் திகதி வழக்கம்போல் கேபிள் இணைக்கும் பணிக்குச் சென்றுள்ளார். ஆனால், இரவு நீண்ட நேரமாகியும். அவர் வீடு திரும்பவில்லை.
இதனால், பதறிப்போன அவரது மனைவி, பிலோமின் ராஜை போனில் அழைத்துள்ளார். ஆனால், அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்து வைக்கப்பட்டிருந்தது. இதனால், அச்சமடைந்த அவர் உடனடியாக உறவினர்களுக்கு இதுகுறித்து தகவல் அளித்தார். அதேபோல், பிலோமின் ராஜின் நண்பர்களை அழைத்தும் பேசியுள்ளார். ஆனால், அவர் குறித்த தகவல் எதுவும் கிடைக்கவில்லை.இந்நிலையில் நேற்று அதிகாலை காளி குப்பம் கடற்கரை பகுதியில் ரத்த காயங்களுடன் ஆண் சடலம் கிடப்பதாகக் கோட்டுச்சேரி பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பொலிஸார், சடலத்தைக் கைப்பற்றி, காரைக்கால் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், அங்கு நடத்திய விசாரணையில் இறந்துகிடந்தது பிலோமின் ராஜ் என்பதையும் உறுதி செய்தனர். இதையடுத்து, இதுதொடர்பாக கொலை வழக்குப் பதிவு செய்த பொலிஸார், அவருக்கு விளையாட்டுப் போட்டி காரணமாக ஏதேனும் முன் பகை இருந்ததா? அல்லது தொழில் மற்றும் வேறு ஏதும் முன் விரோதம் காரணமாகக் கொலை செய்யப்பட்டாரா என்ற கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
உயிரிழந்த பிலோமின் ராஜ் சமீபத்தில் காரைக்காலில் நடைபெற்ற வாலிபால் போட்டியில் வெற்றி பெற்று, முதலமைச்சர் ரங்கசாமி கையால் பரிசு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. விளையாட்டு வீரர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் காரைக்காலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.