யாழில் சிறுமியின் கை அகற்றப்பட்டமை தொடர்பில் சுகாதார அமைச்சு விசாரணை!
காய்ச்சல் காரணமாக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிறுமி ஒருவரின் இடது கை, அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டுள்ளது.
இது தொடர்பில் விசாரணை நடத்தப்பட்டு ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படுமென சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
சம்பவம் தொடர்பான ஆரம்பகட்ட விசாரணை அறிக்கை தற்போது கோரப்பட்டுள்ளதாக பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் ஜீ.விஜேசூரிய கூறினார்.
யாழ்ப்பாணம் – மல்லாகம் பகுதியைச் சேர்ந்த 7 வயது சிறுமியொருவர் காய்ச்சல் காரணமாக கடந்த மாதம் 25 ஆம் திகதி யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
சிறுமிக்கு ஊசி செலுத்துவதற்காக மறுநாள் கெனியூலா செலுத்தப்பட்டதையடுத்து கை வீக்கமடைந்துள்ளது.
பின்னர் கெனியூலா கழற்றப்பட்ட நிலையில், சிறுமியின் இடது கையின் மணிக்கட்டுக்கு கீழுள்ள பகுதி முழுமையாக செயலிழந்ததால் அதனை அறுவை சிகிச்சை மூலம் அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இந்த நிலையில் குறித்த சிறுமியின் இடது கை அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டமை தொடர்பில் வைத்தியசாலை மட்டத்திலும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இந்த சம்பவம் தொடர்பிலான விசாரணைக்கு இரு வைத்திய நிபுணர்கள் மற்றும் தாதியொருவர் அடங்கிய குழு நியமிக்கப்பட்டுள்ளதாக வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், வைத்தியர் தங்கமுத்து சத்தியமூர்த்தி நியூஸ்பெஸ்ட்டுக்கு தெரிவித்தார்.
இந்த குழுவின் அறிக்கை கிடைத்தவுடன் அது தொடர்பான மேலதிக நடவடிக்கையை எடுக்கவுள்ளதாக வைத்தியர் தங்கமுத்து சத்தியமூர்த்தி கூறினார்.
இந்த நிலையில், இந்த சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள முறைப்பாட்டிற்கமைய யாழ்.தலைமையக பொலிஸ் நிலையத்தின் மகளிர் மற்றும் சிறுவர் பிரிவிற்கு பொறுப்பான பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்தூவ தெரிவித்தார்.
வைத்திய பரிசோதனையின் போதா கை அகற்றப்பட்டது அல்லது உண்மையில் என்ன நடந்துள்ளது என்பது தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.