ஜெர்மனியில் அதிகரிக்கப்படும் குறைந்தபட்ச ஊதியம் – ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்

ஜெர்மனியின் குறைந்தபட்ச ஊதியம் அடுத்த ஆண்டு ஒரு மணி நேரத்திற்கு 12.82 யூரோவில் இருந்து 15 யூரோவாக உயரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கிறிஸ்தவ ஜனநாயக ஒன்றியம் மற்றும் சமூக ஜனநாயகக் கட்சியால் முடிவு செய்யப்பட்ட இந்த மாற்றம் சுமார் 10 மில்லியன் தொழிலாளர்களுக்கு பயனளிக்க உள்ளது.
இதன் மூலம், அவர்களின் மாத வருமானம் சுமார் 17% அதிகரிக்கும். இருப்பினும், இந்த ஊதிய உயர்வு பல தொழில்களில் விலை உயர்வுக்கும் வழிவகுக்கும் என கூறப்படுகின்றது.
குறித்த தீர்மானத்தின் மூலம், குறைந்த ஊதியம் பெறும் வேலைகளில் உள்ள தொழிலாளர்கள் அதிக பலனை அடைவார்கள். இதில் பெண்கள், ஜெர்மனியின் கிழக்கு மாநிலங்களில் உள்ளவர்கள் மற்றும் தொழிற்சங்க ஒப்பந்தங்கள் இல்லாத நிலையான கால ஒப்பந்தங்களில் உள்ளவர்கள் அடங்குவர்.
அத்துடன், அலுவலக உதவியாளர்கள், சுரங்க ஊழியர்கள், மருத்துவ உதவியாளர்கள் மற்றும் உணவக ஊழியர்கள் போன்ற வேலைகள் குறிப்பிடத்தக்க சம்பள உயர்வைப் பெறும். அதிக ஊதியச் செலவுகளை எதிர்கொள்ளும் முதலாளிகள் அந்த செலவுகளை வாடிக்கையாளர்களின் மீது சுமத்துவார்கள்.
உணவகங்கள், ஹோட்டல்கள், அழகு நிலையங்கள், விநியோக சேவைகள் மற்றும் பொது போக்குவரத்து போன்ற துறைகளின் சேவைக்கட்டணங்கள் அதிகரிக்கும். காப்பீட்டு நிறுவனங்கள் தங்கள் கட்டணங்களில் சீர்திருத்தங்களை கொண்டுவரும் என்பதால் சுகாதாரச் செலவுகளும் உயரக்கூடும்.
இதேவேளை, உற்பத்தி மற்றும் வங்கி போன்ற தொழில்கள் அதிகம் பாதிக்கப்படாது, ஏனெனில் அங்குள்ள பெரும்பாலான தொழிலாளர்கள் ஏற்கனவே அதிக ஊதியம் பெறுகிறார்கள்.
இதன் மூலம், சில சேவை கட்டணங்கள் உயரும் என்ற போதிலும், பொருளாதாரத்தில் ஒட்டுமொத்த தாக்கம் மிதமானதாகவே இருக்கும் என்பது தெளிவாகின்றது.