உலகளவில் மில்லியன் கணக்கானோர் கடுமையான பட்டினிக்கு தள்ளப்படும் அபாயம்

உலகளவில் சுமார் 14 மில்லியன் பேர் கடுமையான பட்டினிக்கு தள்ளப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
உலக உணவுத் திட்ட அமைப்பு வெளியிட்டுள்ள எச்சரிக்கைக்கமைய, நன்கொடை வழங்குவோரின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளதால், இந்த அபாயம் ஏற்பட்டுள்ளது.
கடந்த சில ஆண்டுகளில் உலகம் முழுவதும் உணவு நெருக்கடி தீவிரமடைந்துள்ளது.
இந்த நிலையில், கொவிட் 19 பெருந்தொற்றுக்கு முன் 135 மில்லியன் பேர் பட்டினியால் பாதிக்கப்பட்டிருந்தனர். தற்போது, இது 319 மில்லியனாக அதிகரித்துள்ளதாக உலக உணவுத் திட்ட அமைப்பு தெரிவித்தது.
ஐக்கிய நாடுகளின் கீழ் செயல்படும் உலக உணவுத் திட்ட அமைப்பு உலகின் மிகப்பெரிய நிவாரண உணவுத் திட்டமாகும்.
ஆனால், இந்த ஆண்டில் அமைப்பிற்கு வழங்கப்படும் நிதி 40 சதவீதம் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது உணவு வழங்கல் நடவடிக்கைகளை பெரிதும் பாதிக்கும் எனவும் அமைப்பு எச்சரித்துள்ளது.