நடுக்கடலில் தத்தளித்த புலம்பெயர்ந்தோர் படகு- உதவச் சென்ற பிரான்ஸ் கடற்படைக்கு கிடைத்த அதிர்ச்சி
புலம்பெயர்வோர் படகொன்று நடுக்கடலில் சிக்கித்தவிப்பதை அறிந்து அவர்களுக்கு உதவி செய்யச் சென்ற பிரான்ஸ் எல்லை பாதுகாப்பு அதிகாரிகளுக்கு, எதிர் பாராத அதிர்ச்சி ஒன்றைக் கொடுத்தார்கள் அந்த படகிலிருந்த புலம்பெயர்வோர்.
நடுக்கடலில் சிறு படகொன்று சிக்கித் தவிப்பதாக பிரான்ஸ் கடற்படை கப்பல் ஒன்றிற்கு தகவல் கிடைத்துள்ளது.உடனே பிரான்ஸ் கடற்படையினர் அந்த இடத்திற்குச் சென்றிருக்கிறார்கள். அங்கு, ஒரு சிறு படகில் சுமார் 50 புலம்பெயர்வோர் இருந்துள்ளார்கள். அவர்களை மீட்க பிரான்ஸ் கடற்படை முயன்றுள்ளது.
ஆனால், உதவச் சென்ற பிரான்ஸ் கடற்படையினருக்கு எதிர்பாராத அதிர்ச்சி ஒன்றைக் கொடுத்துள்ளார்கள் அந்த படகிலிருந்தவர்கள். உங்கள் உதவி எங்களுக்குத் தேவையில்லை, எங்களுக்கு பிரித்தானியாவின் உதவிதான் தேவை என்று கூறியுள்ளார்கள் அந்த புலம்பெயர்வோர்.
அதைத் தொடர்ந்து, பிரான்ஸ் கடற்படையினர், Ranger என்னும் பிரித்தானிய எல்லை பாதுகாப்புப் படை படகைத் தொடர்பு கொண்டு, பிரித்தானிய அதிகாரிகளிடம் விடயத்தைக் கூற, உடனே Ranger அங்கு விரைந்துள்ளது.
புலம்பெயர்வோர் பயணித்த சிறு படகு ஆங்கிலக் கால்வாயின் பிரான்ஸ் பகுதியில் இருந்த நிலையிலும், பிரித்தானிய மீட்புப் படகு வந்து அந்த புலம்பெயர்வோரை மீட்டு பிரித்தானியாவுக்குக் கொண்டு செல்ல நேர்ந்துள்ளது.
இந்த தகவலை அறிந்த கன்சர்வேட்டிவ் கட்சி நாடாளுமன்ற உறுப்பினரான Adam Holloway, இது ஆங்கிலக் கால்வாய் டெக்சி சேவை போல் உள்ளது என்று கூறி தனது கோபத்தை வெளிப்படுத்தியுள்ளதுடன், இப்படி செயல்படுவதை நாம் நிறுத்தியாகவேண்டும் என்று கூறியுள்ளார்.